
நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லத்தீப், அரசியல்வாதிகளுக்கு கூலியாளாக செயல்பட்டு வருகின்றார் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம். தாஹிர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் அவர் உரையாற்றும்போது, இந்தக் குற்றச்சாட்டைக் கூறினார்.”நிந்வூர் பிரதேச செயலாளர் – பிரதேச செயலகத்தில் இருந்து கொண்டு, பழைய அரசியல்வாதிகளுக்காக அரசியல் செய்கிறார். அவர் அரசியல்வாதிகளுக்கு கூலியாளராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்” என நாடாளுமன்ற உறுப்பினர் தாஹிர் இதன் போது கூறினார்.

பிரதேச செயலகத்தில் இருக்கின்ற நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு எதிராகவும் அவர்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையிலும் பிரதேச செயலாளர் செயற்படுவதாகவும் தனது உரையில் தாஹிர் குறிப்பிட்டார் .
அங்குள்ள உத்தியோகத்தர்களை தனது அபிலாசைகளுக்கு ஏற்ப நடக்குமாறு, பிரதேச செயலாளர் பணிக்கின்றார் என்றும், அவர் மேலும் தெரிவித்தார்.
நிர்தவூர் பிரதேச செயலாளர் லத்தீப் மோசமான நடத்தையைக் கொண்டிருக்கின்றார் என்று, தனக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அவரைத் திறம்படவும் சரியாகவும் நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் தாஹிர்; “இல்லாவிட்டால் அவரை வேறு எங்காவது இடம்மாற்றுங்கள்” எனவும் கூறினார்.


