
குவைத்தின் முக்கிய விமான நிலையம் மீதான ஈரான் தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டதாக குவைத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறைந்தது 63 பேர் காயமடைந்தனர்.
ஈரானின் ஒரு வர்த்தகக் கப்பல் மற்றும் ஒரு தகவல் தொடர்பு கோபுரம் மீதான அமெரிக்கத் தாக்குதல்களுக்கு பதிலடியாகவே தனது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது.
விடியற்காலை முதல் ஈரானிலிருந்து குவைத் வான்வெளிக்குள் ஏவப்பட்ட 13 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 17 ஆளில்லா விமானங்களுக்கு பதிலடி கொடுத்ததாக குவைத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பஹ்ரைனில், பொதுமக்கள் உள்கட்டமைப்புகளை குறிவைத்த ஈரானின் மூன்று ஏவுகணைகள் மற்றும் பல ஆளில்லா விமானங்களை இடைமறித்ததாக அந்த நாட்டு ராணுவம் கூறியுள்ளது.
பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை மீதும், குவைத்தில் உள்ள ஹெலிகொப்டர் தளம் ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தியதாக ஈரான் குறிப்பிட்டுள்ளது.
ஈரானியத் தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரானின் கெஷ்ம் தீவு மீது தற்காப்புத் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம் (CENTCOM) இன்று முன்னதாகத் தெரிவித்திருந்தது.



