தலைப்புச் செய்திகள்

தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஈடாக, ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட மாட்டாது: ஈரான் மூத்த அதிகாரி தெரிவிப்பு

தற்காலிக போர்நிறுத்தத்திற்கு ஈடாக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் திறக்காது என்று, ஈரானின் மூத்த அதிகாரியொருவர் இன்று (06) ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், நிரந்தர போர்நிறுத்தத்திற்கான தயார்நிலையில் அமெரிக்கா இல்லை என்று தங்கள் நாடு கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

உடனடி போர்நிறுத்தத்திற்கான பாகிஸ்தானின் முன்மொழிவை ஈரான் பெற்றுள்ளதாகவும், அதை பரிசீலித்து வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

காலக்கெடுவை ஏற்றுக்கொண்டு ஒரு முடிவை எடுக்குமாறு அழுத்தம் கொடுக்கப்படுவதை தெஹ்ரான் ஏற்காது என்றும் அவர் கூறினார்.

போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கும் – திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரக்கூடிய ஒரு திட்டத்தை, ஈரானும் அமெரிக்காவும் பெற்றுள்ளன என்று இந்த முன்மொழிவுகள் குறித்து அறிந்த ஓர் வட்டாரம் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளது.

போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு கட்டமைப்பு பாகிஸ்தானால் உருவாக்கப்பட்டு, இரவோடு இரவாக ஈரான் மற்றும் அமெரிக்காவுடன் பரிமாறிக்கொள்ளப்பட்டது என்றும், இது உடனடி போர் நிறுத்தம் மற்றும் அதைத் தொடர்ந்து ஒரு விரிவான ஒப்பந்தம் என இரண்டு அடுக்கு அணுகுமுறையை கோடிட்டுக் காட்டுகிறது என்றும் அந்த வட்டாரம் மேலும் கூறியுள்ளது.

“அனைத்து அம்சங்களும் இன்று ஒப்புக்கொள்ளப்பட வேண்டும்,” என்று அந்த வட்டாரம் ரொய்ட்டர்ஸிடம் கூறியதுடன், பேச்சுவார்த்தைகளில் ஒரே தகவல் தொடர்பு வழியாக இருக்கும் பாகிஸ்தான் மூலம் – மின்னணு முறையில் இறுதி செய்யப்படும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமாக இந்த ஆரம்பகட்ட உடன்படிக்கை கட்டமைக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வோன்ஸ், சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோருடன் “இரவு முழுவதும்” தொடர்பில் இருந்ததாக அந்த வட்டாரம் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தது.

முன்னதாக, அமெரிக்க, இஸ்ரேலிய மற்றும் பிராந்திய வட்டாரங்களை மேற்கோள் காட்டி, போருக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய – இரு கட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, சாத்தியமான 45 நாள் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்கா, ஈரான் மற்றும் பிராந்திய மத்தியஸ்தர்கள் விவாதித்து வருவதாக ஆக்சியோஸ் செய்தி வெளியிட்டிருந்தது.