தலைப்புச் செய்திகள்

ஜனாதிபதியைச் சந்தித்ததை அடுத்து, பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உண்ணா விரதம் தற்காலிகமாக நிறுத்தம்

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு வந்த உண்ணா விரதப் போராட்டத்தை, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் தற்காலிகமாக கைவிட்டனர்.

இவர்கள் 09 நாட்களாக தமது உண்ணா விரதப் போராட்தைத்தைத் தொடர்ந்து வந்த நிலையில், இன்று (03) ஜனாதிபதியைச் சந்தித்தனர்.

ஆரம்பத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தொடங்கிய இவர்கள்,பின்னர், நிரந்தர ஆசிரியர் சேவையில் உடனடியாக உள்வாங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.

இவர்கள் ஏற்கனவே பாடசாலைகளில் கற்பித்தல் பணிகளைச் செய்து வருவதாகவும், எனவே மேலும் தாமதமின்றி ஆசிரியர் சேவையில் முறையாக உள்வாங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளையடுத்து, அவர்களின் கோரிக்கைகள் குறித்த மேலதிக நடவடிக்கைகள் மற்றும் உத்தரவாதங்கள் கிடைக்கும் வரை, உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டனர்.