
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் (GMOA), அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை தொடர்பில் முன்னெடுத்து வரும் வேலைநிறுத்தப் போராட்டம் நியாயமற்றது என, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த விளக்கத்தை அளித்தார்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தற்போதைய வைத்திய அத்தியட்சகரை பதவியிலிருந்து நீக்குமாறே – வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த வைத்திய அத்தியட்சகரின் நியமனம் அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, ஆரம்பகட்ட விசாரணைகள் நிறைவடைவதற்கு முன்னர், அவரை தன்னிச்சையாக பதவியிலிருந்து நீக்க முடியாது என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தற்போது இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
விசாரணைகளில் அவர் குற்றவாளியாகக் காணப்படும் பட்சத்தில் மட்டுமே அமைச்சு நடவடிக்கை எடுக்க முடியும்.
அவ்வாறின்றி அவசரமாக எடுக்கப்படும் முடிவுகள் அதிகாரிகளுக்கு எதிராக சட்டச் சிக்கல்களை உருவாக்கும்.
கிழக்கு மாகாண மக்களைப் பாதிப்புக்குள்ளாக்கும் வகையில், ஒரு தனி நபரை நீக்குவதற்காக முன்னெடுக்கப்படும் இந்த வேலைநிறுத்தம் – மிகவும் அநீதியானது என தான் கருதுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


