தலைப்புச் செய்திகள்

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ திட்டத்துக்கு 1893 மில்லியன் ரூபாய் கிடைத்துள்ளது

நாட்டில் ஏற்பட்ட காலநிலை அனரத்தத்தைத் தொடர்ந்து, நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக 1,893 மில்லியன் ரூபாய் நிதி உதவி பெறப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் டொக்டர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ எனும் பெயரில் தொடங்கப்பட்ட இந்த முயற்சிக்காக – உள்நாட்டு பங்களிப்பாளர்கள், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து இந்த நிதி கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட வியாபார மற்றும் சொத்து உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்குவதற்காக, அனைத்து காப்புறுதி நிறுவனங்களின் தலைவர்களும் கலந்து கொண்ட கூட்டத்தை – இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு சமீபத்தில் கூட்டியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சூறாவளியால் ஏற்பட்ட சேதமடைந்த வியாபாரங்கள், சொத்துக்கள் மற்றும் உயிர் இழப்புகளுக்கு உடனடி இழப்பீடு வழங்கும் செயல்முறையை, அனைத்து காப்புறுதி நிறுவனங்களும் ஏற்கனவே தொடங்கியுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

இந்த திட்டத்தின் கீழ், சிறிய சொத்து சேதங்களுக்கான இழப்பீட்டுத் தொகைகளை வழங்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. தேவையான தகவல்களைச் சேகரித்து சரிபார்த்த பிறகு, விரிவான சொத்து சேதத்திற்கான இழப்பீடு வழங்கப்படும் என்று காப்பீட்டு நிறுவன பிரதிநிதிகள் தெரிவித்துள்ளார்கள்.