
– அஷ்ரப் ஏ சமத் –
செவிப்புலன் அற்றவர்களுக்கான சத்திர சிகிச்சை இலங்கையில் முதன்முறையாக நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று (21) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இச் சத்திர சிகிச்சையை – காது, மூக்கு, தொண்டை மற்றும் தலை, கழுத்து சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் ரிஸ்னி சக்காப் மேற்கொண்டார்.
58,47,11 ஆகிய வயதுடைய மூவருக்கு இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டன. இதன் பின்னர் வைத்திய நிபுணர் ரிஸ்னி சக்காப் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;
“காது கேட்காதவர்களுக்கான புதிய சத்திர சிகிச்சை முறையை நான் இன்று முதன் முதலாக இலங்கையில் – நீர்கொழும்பு வைத்தியசாலையில் அறிமுகம் செய்து வைத்தேன். அது ‘என்டொஸ்கோபி யுஸ்ட்க்ஷியன் டியுப் சேர்ஜரி’ எனும் சத்திர சிகிச்சையாகும்.
இதற்கு முன்பு காது கேட்காதவர்களுக்கு அவர்களின் காதில் அடைபட்டுள்ள சளி, சீழ், போன்றவற்றை அகற்றுவதற்காக – செவிப்பறையில் ஒரு துவாரம் இட்டு, அதனூடாக அவை அகற்றப்படுகின்றன. இதனால் செவிப்பாறை பழுதடைகிறது.

தற்போது இந்தப் புதிய முறையின் மூலம் – மூக்குத் துவாரத்தில் ஊடாக கமராவை அனுப்பி, காதுக்குழி குழாய் மூலம் சளி,சீழ் என்பது அகற்றப்படுகின்றன. இச் சத்திர சிகிச்சைக்கு சுமார் 30 நிமிடங்கள் எடுக்கும்
இதனை செய்வதற்கு நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் புஷ்பா ஹம்லத் பூரண ஆதரவு வழங்குகின்றார். அத்துடன் உதவி வைத்தியர், நினைவு இழக்கச் செய்யும் இரு வைத்தியர்கள், இரண்டு தாதிகள் இரு ஊழியர்கள் அடங்கலான குழுவினர் உதவி செய்கின்றனர்.
இந்தச் சத்திர சிகிச்சை இலங்கைக்கு முதல்முறை என்றாலும், எனக்கு இது முதலாவது தடவையல்ல. இதற்கு முன்பு நான் இங்கிலாந்தில் இவ்வாறு சத்திர சிகிச்சைகள் செய்துள்ளேன். எனது அனுபவம் மற்றும் வைத்தி மேற்படிப்பு கல்வியை இலங்கை மக்களுக்கு இலவசமாக, இத் திட்டத்தினை சுகாதார அமைச்சின் கீழ், இலவச வைத்தியசாலைகளில் ஆரம்பித்துள்ளேன்” என்றார்.
இதனை அறிமுகம் செய்தமைக்கு வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் புஷ்பா கம்லத் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
கழுத்தில் உள்ள தைரொய்ட்டை கழுத்தில் வெட்டாமல் வாய் ஊடாக அகற்றுவதை 2019 இல் குளியாப்பிட்டிய வைத்தியசாலையிலும் 2020ல் ஹோமாகம வைத்தியசாலையில் தொண்டையில் அஸ்ட்ரா சவுன்ட் மூலமும் நீக்கினேன். நான் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடமை புரியும் போது முப்பரிமாண 3 டி முறையில் கழுத்தில் சத்திர சிகிச்சைக்காக எனக்கு மட்டும் ஜனாதிபதி விருது கிடைத்தது.



