தலைப்புச் செய்திகள்

இளம் பெண்கள், பாடசாலை மாணவிகளிடையே பீதி தாக்கம் (Panic attack) அதிகரித்து வருவதாக எச்சரிக்கை

நாடு முழுவதும் இளம் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகளிடையே பீதியால் ஏற்படும் தாக்கம் (Panic attack) அதிகரித்து வருவது குறித்து, சுகாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர் என்று, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) உதவிச் செயலாளர் டொக்டர் பாலித ராஜபக்ஷ தெரிவித்தார்.

வைத்திய அவதானிப்புகள், வாரத்துக்கு ஒன்பது முதல் 20 பாடசாலை மாணவிகள் மற்றும் 07 முதல் 08 இளம் பெண்கள் பீதி தாக்கத்துடன் தொடர்புடைய அறிகுறிகளுடன் வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவுகளுக்கு கொண்டு வரப்படுகின்றனர் எனவும் கூறினார்.

நோயாளிகள் பெரும்பாலும் தலைச்சுற்றல், மயக்கம், விரைவான சுவாசம், மார்பு வலி, கைகள் மற்றும் கால்களில் உணர்வின்மை, விரல்கள் மற்றும் கால்விரல்களில் கூச்ச உணர்வு, மார்பில் இறுக்கம், அதிகப்படியான வியர்வை, வாய் வறட்சி மற்றும் சில சந்தர்ப்பங்களில், சிறிது நேரம் சுயநினைவு இழப்பு ஆகியவற்றை அனுபவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

“இந்த அறிகுறிகள் தெளிவான தூண்டுதல் இல்லாமல் ஏற்படக்கூடிய திடீர் மற்றும் தீவிரமான பய உணர்வுகளுடைய – பீதித் தாக்குதலினால் ஏற்டுகின்றன” என்று டாக்டர் பாலித ராஜபக்ஷ விளக்கினார். “இது ஒரு மிகப்பெரிய, கட்டுப்படுத்த முடியாத பயம். கட்டுப்பாட்டை இழக்கும், சுவாசிக்க முடியாமல் போகும் அல்லது சில சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பயம்” எனவும் அவர் விளக்கினார்.

பீதி தாக்குதல்கள் பெரும்பாலும் உளவியல் ரீதியானவை. என்றாலும், நீரிழிவு நோய், தைராய்டு கோளாறுகள், பதட்டம், பிரசவத்திற்குப் பிந்தைய மாற்றங்கள் அல்லது உள் காது பிரச்சினைகள் போன்ற சில நிலைமைகளும் – இதே போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் என்றும்” அவர் கூறினார்.

“எந்த அடிப்படை வைத்தியப் பிரச்சினையும் கண்டறியப்படவில்லை என்றால், இது குறித்து பீதி அடையத் தேவையில்லை” என்றும் அவர் அறிவுறுத்தினார். “குறித்த நபரை அமைதிப்படுத்தி, மெதுவாக சுவாசிக்க உதவுவது, மூக்கு வழியாக மூச்சை இழுத்து உதடுகள் வழியாக மூச்சை வெளியேற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகள், சுவாசத்தை உறுதிப்படுத்த்துவதற்கும் பதட்டத்தைக் குறைப்பதற்கும் உதவும்” எனவும் அவர் அறிவுறுத்தினார்.

பெரும்பாலான நிகழ்வுகளை ஆலோசனை மற்றும் உறுதியளிப்பதன் மூலம் முழுமையாக நிர்வகிக்க முடியும் என்று அவர் கூறினார். கல்வி மன அழுத்தம் மற்றும் சமூக அழுத்தம் பொதுவான தூண்டுதல்களாக இது இருப்பதால், ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களின் உணர்ச்சி நல்வாழ்வில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

“இந்த பயம் உண்மையானது அல்ல என்பதை குழந்தைகள் புரிந்துகொள்ள வழிநடத்தப்பட வேண்டும்” என்று டொக்டர் பாலித ராஜபக்‌ஷ மேலும் கூறினார். “பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சரியான நேரத்தில் ஆதரவையும் பச்சாதாபத்தையும் உறுதி செய்வதற்கு ஆசிரியர்களிடையே விழிப்புணர்வு மிக முக்கியமானது” என்றும் அவர் தெரிவித்தார்.