
பாடசாலை மாணவர்கள் மற்றும் கட்டிளம்பருவ வயதிலுள்ளவர்களை போதைப்பொருள் தொடர்பிலும், உளவளம் குறித்தும் விழிப்புணர்வூட்டுவதோடு, உளவளத்துணை சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் இடைக்கால வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையர்களுக்கிடையே தற்கொலை வீதம் அதிகரித்தல், போதைப்பொருள் பாவனை அதிகரித்தல், குறிப்பாக கட்டிளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களுக்கிடையே உளச்சமூகப் பிரச்சினைகள் அதிகமான தோன்றியிருக்கின்றமையை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
அதற்கமைய, 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டதன் பிரகாரம், உளநல ஆரோக்கியம் பற்றிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, விசேட வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துவதற்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்கீழ், பாடசாலை மாணவர்கள் மற்றும் கட்டிளம்பருவ வயதிலுள்ளவர்களை விழிப்புணர்வூட்டல் மற்றும் உளவளத்துணை சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் இடைக்கால வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு முன்மொழிந்துள்ளது.

அதற்கமைய, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்ச, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை, தேசிய உளநல சுகாதார விஞ்ஞான நிறுவனம், மாகாண மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள், மருத்துவமனைகள் மற்றும் ஏனைய ஏற்புடைய நிறுவனங்களுடன் இணைந்து உத்தேச வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


