
இலங்கையில் ஓரினச்சேர்க்கை உரிமைகள் மற்றும் பாலின அடையாள மாற்றங்களை ஊக்குவிக்கும் வெளிநாட்டு ஆதரவுடனான முயற்சிகள் குறித்து, கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் கவலை தெரிவித்துள்ளார்.
இவை ‘நாட்டின் பாரம்பரிய மதிப்புகள் மற்றும் திருமண முறைமை அழிவடைவதற்கு’ வழிவகுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மூன்று வாரங்களில் இரண்டாவது தடவையாக, இது போன்ற கருத்துக்களை அவர் பொதுவில் வெளியிட்டுள்ளார்.
ருஹுனு பல்கலைக்கழகத்தின் வேந்தர் டொக்டர் அகுரெட்டிய நந்த தேரருக்கு, மியான்மர் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ‘அக்மக பண்டித’ என்ற கௌரவப் பட்டத்தை ஒப்டைக்கும் விழா நேற்று (14) கொழும்பில் நடைபெற்ற போது, பேராயர் மெல்கம் ரஞ்சித் இந்த விடயங்களைக் கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “வெளிநாட்டு அமைப்புகள் ஓரினச் சேர்க்கையை ஊக்குவிப்பதற்கும், பாலின அடையாள மாற்றங்களை எளிதாக்குவதற்குமான திட்டங்களில் இளைஞர்களையும் பெண்களையும் தீவிரமாக சேர்த்து வருகின்றன. தனிநபர்கள் தங்கள் சட்டப்பூர்வ பாலினத்தை மாற்றிக்கொள்ள உதவும் சான்றிதழ்களை வழங்குவதில் சில மனநல மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். இது பின்னர் சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் புதிய பிறப்புச் சான்றிதழ்களில் இருக்கும்” என்றார்.
இத்தகைய மாற்றங்களால், தனிநபர்கள் தங்கள் புதிய பாலினத்தின் போர்வையில், ஒரே உயிரியல் பாலினத்தைச் சேர்ந்தவர்களை – திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கும். இந்த செயற்பாடு நாட்டில் திருமணச் சட்டங்களை திறம்பட மாற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இந்த நாட்டில் திருமணச் சட்டங்களை முற்றிலுமாக மாற்றவும், நமது திருமண முறைமையில் சிதைவை நோக்கி இட்டுச் செல்லவும், இந்த திட்டம் ரகசியமாக செயல்படுத்தப்படுகிறது” என்றும் அவர் கூறினார்.

பாலின அடையாளத்துடன் போராடும் தனிநபர்கள் – மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும், துன்புறுத்தப்படக்கூடாது என்று வலியுறுத்திய பேராயர் மெல்கம் ரஞ்சித், ”பரந்த உந்துதல் என்பது அத்தகைய அடையாளங்களை ஒரு வாழ்க்கை முறையாக இயல்பாக்குவதற்கான முயற்சியாகும். இது இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறது, இயற்கை குடும்ப அமைப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது” என்றார்.
சில அரசியல் கட்சிகளும் தலைவர்களும் இந்த முயற்சிகளை ஆதரிப்பதாகவும், இது நாட்டின் எதிர்காலத்திற்கும் புத்த சாசனத்திற்கும் ஒரு பெரிய பிரச்சினை எனவும் அவர் மேலும் குற்றம் சாட்டினார்.
மனித உரிமைகளின் மதிப்பை ஒப்புக்கொண்டாலும், இந்த நடவடிக்கைகள் “வஞ்சகமானவை” என்றும், “நமது கலாச்சாரத்துடன் பொருந்தாதவை” எனவும் அவர் கூறினார். அவை “எதிர்கால சந்ததியினருக்கு பெரும் அச்சுறுத்தலை” ஏற்படுத்துவதாகவும் எச்சரித்தார்.



