
புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் முப்பது நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளதோடு, அதற்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளார்.
தொலைக்காட்சி நேர்காணலின் போது பேசிய பிரதமர்; ஒரு பாடத்தின் நேரம் 45 நிமிடங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.
“பாடம் அவசரமின்றி கற்பிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது. குழு ஆய்வு மற்றும் விளக்கக்காட்சிகள் போன்ற பல நடைமுறை செயல்பாடுகளை நாங்கள் சேர்த்துள்ளோம். மாணவர்களுக்கு கற்பிக்க ஆசிரியருக்கு போதுமான நேரம் இருக்க வேண்டும். அதே நேரத்தில் மாணவர்கள் அவசரமின்றி இந்த நடவடிக்கைகளில் பங்கேற்க நேரம் தேவை” என்று அவர் விளக்கினார்.
பாடசாலைகளை காலை 08.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடத்துவதற்கு ஆரம்பத்தில் முன்மொழியப்பட்டதாக கூறிய பிரதமர் ஹரினிஅமரசூரிய, இருப்பினும், பாடசாலை நேரத்தை அரை மணி நேரம் மட்டுமே நீடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டதாகவும் கூறினார்.
போக்குவரத்து போன்ற நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்ட பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.



