
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு, அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளிலும், அவரை குற்றவாளி என்று கண்டறிந்துள்ளது என, சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்ரமரத்ன இன்று நாடாளுமன்றில் அறிவித்தார்.
இன்றைய (22) நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடங்கியபோது, தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்க பரிந்துரைத்த விசாரணைக் குழுவின் முழு அறிக்கையும் தனக்குக் கிடைத்துள்ளதாகவும் சபாநாயகர் கூறினார்.
2002 ஆம் ஆண்டடின் 05 ஆம் இலக்க – அதிகாரிகளை நீக்குதல் (நடைமுறை) சட்டத்தின் பிரிவு 8(2) இன் கீழ், பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலும் – குழு ஒருமனதாக, அவரைக் குற்றவாளி என்று கண்டறிந்துள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.
இலங்கையின் அரசியலமைப்புச் செயல்பாட்டில் இதுபோன்ற விசாரணைக் குழு ஒன்று, பொலிஸ் மா அதிபர் பதவியிலுள்ள ஒருவரை, அப் பதவியிலிருந்து நீக்க பரிந்துரைத்துள்ளமை, இதுவே முதல் முறை என்பதால், இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பம் என்றும் சபாநாயகர் கூறினார்.
குற்றச்சாட்டுகளை நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் ஒரு தீர்மானத்தின் வடிவத்தில் வைக்கப்படும் என்றும், இது நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்கெடுப்புக்காக விடப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
விசாரணைக் குழு உச்ச நீதிமன்ற நீதியரசர் பி.பி. சூரசேன தலைமையில் நீதியரசர் டப்ளியூ.எம்.என்.பி. இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் (அலுவல் முறை) தலைவர் ஈ.டப்ளியூ.எம். லலித் ஏகநாயக்க ஆகியோரைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.



