
– றிசாத் ஏ காதர் –
‘அனைவர்க்கும் ஆரோக்கியமான வாழ்வு’ எனும் தொனிப்பொருளில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினர், கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் வைத்திய பரிசோதனை முகாமொன்றை இன்று (17) நடத்தினர்.
இதன்போது, கல்முனை வலயக் கல்விப் அலுவலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தொற்றா நோய் தொடர்பான மருத்துவப் பரிசோதனகள் மேற்கொள்ளப்பட்டன.
கொலஸ்ரோல், உயர்/தாழ் குருதி அமுக்கம், சர்க்கரை வியாதி , சிறுநீரகம் ஆகியவற்றுக்கான பரிசோதனைகள் ஆகியவற்றுடன் பற்சிகிச்சையும், கண் பரிசோதனைகளும் இந்த வைத்திய முகாமில் மேற்கொள்ளப்பட்டன.
“இன்றைய ஆரோக்கிய வாழ்வுக்கு ஏற்றாற்போல் உணவுகளை உட்கொள்வதே தொற்றா நோய்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கான முதற்தீர்வாக மருத்துவ உலகு பரிந்துரைத்துள்ள நிலையில், அனை மக்களின் காலடிக்கு கொண்டு சேர்ப்பதுவே சுகாதாரத் துறையின் பணியாகும். அதனையே நாமும் செய்கின்றோம்” என, இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் திருமதி ஷஹ்றா ஷராப்டீன் கூறினார்.
“கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகார எல்லைக்குள் வசிக்கும் மக்களின் சுகாதாரம், உணவுப் பழக்க வழக்கம், தொற்றா நோய் போன்றவை தொடர்பில் அறிவுறுத்தி அதற்கான செயற்றிட்டங்களை முன்னெடுக்கின்றோம். அதன் ஒரு கட்டமாக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு இந்த சேவையை கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைவாக வழங்குகின்றோம்” எனவும் அவர் தெரிவித்தார்.





