தலைப்புச் செய்திகள்

டொக்டர் மகேஷி விஜேரத்னவை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் ஆலோசகர் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் மகேஷி விஜேரத்னவை ஜூலை 15 ஆம் திகதி வரை – தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு சட்ட பிரதிநிதிகள் முன்வைத்த விடயங்களைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதம நீதவான் தனுஜ லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இதே வழக்கு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேலும் இரண்டு சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

டொக்டர் மகேஷி விஜேரத்ன, தான் இணைந்த தனியார் நிறுவனம் மூலம் 50,000 ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை, நோயாளிகளுக்கு 175,000 ரூபாய்க்கு விற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பின்னர் தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

டொக்டர் மகேஷியின் இந்த மோசடி காரணமாக, நோயாளிகளுக்கு 300 மில்லியன்ரூபாய்க்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டிய லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு; டொக்டர் மகுஷி – உத்தியோகபூர்வ வைத்திய நடைமுறைகள் மூலம், அறுவை சிகிச்சை பொருட்களை வாங்காமல் பொது சேவை கொள்முதல் விதிகளை மீறினார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும், பல நாட்களாக மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, டொக்டர் மகேஷி விஜேரத்ன அறுவை சிகிச்சை செய்திருப்பதும் சமீபத்தில் அம்பலமாகியது.