தலைப்புச் செய்திகள்

சம்மாந்துறை பிரதேச சபையை மக்கள் காங்கிரஸ் வென்றது: தவிசாளரானார் மாஹிர்

– தில்சாத் பர்வீஸ் –

சம்மாந்துறை பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. அந்த சபையின் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஐ.எம். மாஹிர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புதிய தவிசாளர் மற்றும் உப தவிசாளர்களைத் தெரிவு செய்வதற்கான கூட்டம், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் இன்று வியாழக்கிழமை (26) சம்மாந்துறை பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.

புதிய தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்காக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் 09 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் 05 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் 02 உறுப்பினர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் 02 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சார்பில் 02 உறுப்பினர்களும், தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் 01 உறுப்பினரும், சுயேட்சை குழுவின் சார்பில் 03 உறுப்பினர்களும் என – மொத்தமாக 23 உறுப்பினர்கள் கூட்ட மண்டபத்திற்கு சமூகமளித்திருந்தனர்.

சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் பதவிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஐ.எம். மாஹிர் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் எஸ். நளீம் ஆகிய இருவரும் போட்டியிட்டனர்.

இதன்படி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஐ.எம். மாஹிர் 07 மேலதிக வாக்கு வித்தியாசத்தில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

அத்துடன், உப தவிசாளர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் வி. வினோகாந், தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் உறுப்பினர் ஏ. சதானந்தன், சுயேட்சை குழு உறுப்பினர் எஸ்.எல்.ஏ. நசார் ஆகியோர் போட்டியிட்டனர்.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் வி. வினோகாந் 12 வாக்குகளைப் பெற்று சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

தவிசாளர், உப தவிசாளர் தெரிவுகளின் போது – தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் யாருக்கும் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிஷாட் பதியுதீன் பார்வையாளராகக் கலந்து கொண்டார்.