தலைப்புச் செய்திகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பகிடிவதை; வீடியோ வெளியாகி சர்ச்சை: சம்பவம் குறித்து பதிவாளர் விளக்கம்

– யூ.எல். மப்றூக் –

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் பகிடிவதை செய்யப்படும் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், அது குறித்த விபரங்களை அந்தப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வழங்கியுள்ளார். குறித்த பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட முதலாமாண்டு மாணவர்கள் மீது இந்த பகிடிவதை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

பொறியியல் பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாமாண்டு மாணவர்களே – இந்தப் பகிடிவதையில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்படி பகிடிவதை சம்பவம் குறித்து -தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எம்.ஐ. நவ்பரிடம் ‘புதிது’ செய்தித்தளம் தொடர்புகொண்டு கேட்டபோது; குறித்த பகிடிவதைச் சம்பவம் மூன்று வாரங்களுக்கு முன்னர் நடந்துள்ளது என்றும், கடந்த 19ஆம் திகதியே இது தொடர்பில் பல்கலைக்கழகத்துக்கு முறைப்பாடு கிடைத்ததாகவும் கூறினார்.

அதுவரையில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு இவ்வாறானதொரு பகிடிவதைச் சம்பவம் நடந்தது பற்றி தெரியாது எனவும் பதிவாளர் நவ்பர் குறிப்பிட்டார்.

“முறைப்பாடு கிடைத்தவுடன், இதுதொடர்பில் உண்மையைக் கண்டறியும் குழுவொன்று நியமிக்கப்பட்டது. பின்னர் குறித்த வீடியோவில் இருக்கும் மாணவர்கள் கண்டறியப்பட்டார்கள். அதற்கிணங்க பல்கலைக்கழகத்துக்குள் நுழைவதற்கு 22 மாணவர்களுக்கு நிர்வாகம் தடை விதித்துள்ளது” என, பதிவாளர் நவ்பர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட்டு, குற்றவாளிகள் அடையாளம் காணப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.

மேலும், அக்கரைப்பற்று பொலிஸாரும் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் பதிவாளர் தெரிவித்தார்.

அண்மையில் சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் – இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் பகிடிவதை காரணமாக தற்கொலை செய்து கொண்டமை தொடர்பாக, சிஐடியினர் நடத்திய விசாரணையினை அடுத்து, பகிடிவதை முறைப்பாடுகள் குறித்தும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

அதன்படி, ஜுன் மாதம் 19ஆம் திகதி வெளியான தகவலுக்கிணங்க, இந்த ஆண்டு பகிடிவதை தொடர்பான 30க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் சிஐடிக்கு கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதில் அதிகபட்சமாக சபரகமுவ பல்கலைக்கழகத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன எனவும் கூறப்பட்டது.

பகிடிவதை சம்பந்தமாக கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகங்கள் தொடர்பிலும் சிஐடிக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்பான செய்தி: பகிடிவதை தொடர்பில், 30 முறைப்பாடுகள் சிஐடியில் பதிவு; சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் அதிகம்: கிழக்கு, ஒலுவிலிலும் நடக்கிறது