தலைப்புச் செய்திகள்

ஆமாவா, இல்லையா என்பதை இரண்டு வாரங்களில் சொல்வாராம் ட்ரம்ப்: பலத்தைப் பயன்படுத்தவும் பயப்படவில்லையாம்

இஸ்ரேல்-ஈரான் மோதலில் அமெரிக்கா ஈடுபடுவதா இல்லையா என்பது குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் – அடுத்த இரண்டு வாரங்களில் முடிவெடுப்பார் என்று வெள்ளை மாளிகை இன்று (19) தெரிவித்துள்ளது.

ட்ரம்பின் செய்தியை மேற்கோள் காட்டி, வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் ஊடகவியலாளரிடம் இந்த விடயத்தைக் கூறினார்.

“எதிர்காலத்தில் ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுமா இல்லையா என்பது குறித்து கணிசமான வாய்ப்பு உள்ளது என்ற உண்மையின் அடிப்படையில், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் செல்லலாமா வேண்டாமா என்பதை நான் எனது முடிவை எடுப்பேன்” என, ட்ரம்ப் கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுடன் ஒரு ராஜதந்திர தீர்வைத் தொடர ட்ரம்ப் ஆர்வமாக இருப்பதாகவும், ஆனால் ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது என்பதை உறுதி செய்வதே அவரின் முதன்மையான முன்னுரிமை என்றும் லீவிட் கூறினார்.

எந்தவொரு ஒப்பந்தமும் – தெஹ்ராானின் யுரேனியம் செறிவூட்டப்படுவதைத் தடைசெய்து, அணு ஆயுதத்தை அடைவதற்கான ஈரானின் திறனை நீக்க வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

“ஜனாதிபதி எப்போதும் ஒரு ராஜதந்திர தீர்வில் ஆர்வமாக உள்ளார். அவர் அமைதியை உருவாக்குபவர். அவர் வலிமை மூலம் அமைதியை உருவாக்கும் ஜனாதிபதி. எனவே ராஜதந்திரத்திற்கான வாய்ப்பு இருந்தால், ஜனாதிபதி எப்போதும் அதை செயற்படுத்துவார்” என்றும் லீவிட் கூறினார். “ஆனால் அவர் பலத்தைப் பயன்படுத்த பயப்படவில்லை” எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஈரான் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் – காங்கிரஸின் அங்கீகாரத்தை ட்ரம்ப் பெறுவாரா என்பதை லீவிட் கூற மறுத்துவிட்டார்.