
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் படி – பெரும்பான்மை ஆசனங்களை பெற்றுக் கொள்ளாமை என்பது, ஆட்சியமைப்பதற்கு ஒரு தடையாக இருக்காது என்று, தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
“எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத ஆட்சியை அமைப்பதற்கு எந்தத் தடையும் இல்லை” என்று சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஊடகவியலாளர்களிடம் கூறினார்.
“எல்பிட்டிய பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி – மற்ற கட்சிகளால் ஆதரிக்கப்பட்டது போல, சபைகள் ஒருமித்த கருத்துக்கு வரலாம் அல்லது வாக்கெடுப்பு மூலம் மேயர் அல்லது தவிசாளரைத் தேர்ந்தெடுக்கலாம்” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் – வாக்களிப்பு குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த சமன் ஸ்ரீ ரத்நாயக்க; 2018 தேர்தல்களுடன் ஒப்பிடும்போது வாக்களிப்பு குறைவாக இருந்தது என்பதை ஒப்புக்கொண்டார்.
“பொதுவாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் மக்கள் வாக்களிப்பதில் ஆர்வம் குறைவாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது,” என்றும் அவர் கூறினார்.
“2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் விதிவிலக்காக இருந்தன, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 78 சதவீத வாக்குப்பதிவு இருந்தது. இந்த ஆண்டு, அது 55 முதல் 60 சதவீதம் வரை இருந்தது. இது சராசரி நிலை.”
”சில தனிமைப்பட்ட வன்முறை சம்பவங்கள் இருந்தபோதிலும், தேர்தல் பெரும்பாலும் அமைதியாக இருந்தது” என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்பான செய்தி: தேசிய மக்கள் சக்திக்கு நாடு முழுவதும் 3927 ஆசனங்கள்



