
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை, சட்டமா அதிபரிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
‘பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை’யை மார்ச் 14 ஆம் திகதி – நாடாளுமன்றத்தில் சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமர்ப்பித்தார். இம் மாதம் 10ஆம் திகதி பட்டலந்த ஆணைக்குழு தொடர்பான விவாதம் நாடாளுமன்றில் இடம்பெற்றது.
அப்போது, தேவையான நடவடிக்கை குறித்து ஆலோசனை பெறுவதற்காக, அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பப்படும் என்று – அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அறிக்கையை ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க – ஒரு சிறப்புக் குழுவை நியமிப்பார் என்றும் அவர் கூறினார்.
இந்த ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அல் ஜசீரா ஊடகத்துக்கு வழங்கிய சர்ச்சைக்குரிய நேர்காணலைத் தொடர்ந்து, பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மீண்டும் விவாதத்துக்கு உள்ளானது.
அந்த நேரத்தில், பட்டலந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள – தனது தொடர்பு குறித்த குற்றச்சாட்டுகளுக்கு அண்மையில் பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை நிராகரித்து, அது அரசியல் நோக்கம் கொண்டது எனக் கூறினார்.
இது குறித்து விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட ரணில் விக்கிரமசிங்க, தன்னை இழிவுபடுத்தும் நோக்கத்துக்காகவே ஆணைக்குழு நிறுவப்பட்டதாகவும், ஆனால் அதன் நோக்கத்தை அடையத் தவறிவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
1988-1990 கிளர்ச்சிக் காலத்தில், பொலிஸ் அதிகாரிகளுக்கு, அவர் வீட்டு வசதி செய்து கொடுத்தமை பற்றி மட்டுமே அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகவும், வேறு எந்த குற்றச்சாட்டுகளிலும் அவர் பற்றிக் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை என்றால் என்ன?
1988/90 காலகட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், கொலைகள் மற்றும் ஆட்கள் காணாமல் போனமை குறித்து – இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதியாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பதவியேற்றதும், இந்த சம்பவங்களை விசாரிக்க செப்டம்பர் 21, 1995 அன்று -ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை அமைத்தார்.
பட்டலந்த வீட்டுவசதித் திட்டத்தில் தனிநபர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தமை, சித்திரவதை செய்யப்பட்டமை, படுகொலை செய்யப்பட்டமை மறறும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களை ஆராயும் பணியை – பட்டலந்த ஆணைக்குழு மேற்கொண்டது.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆதாரங்களைச் சேகரித்த பிறகு, 1998 இல் ஜனாதிபதி குமாரதுங்கவிடம் பட்டலந்த ஆணைக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. ஆனால் பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகள் ஒருபோதும் செயல்படுத்தப்படவில்லை.



