
ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் மைத்திரிபால சிறிசேன ஆட்சிக் காலத்தில் – ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜெயமஹா சிங்கப்பூரில் இல்லை என்று, உச்ச நீதிமன்றத்துக்கு சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.
அவரது விடுதலை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணையின் போது இன்று (29) இந்த தகவல் தெரியவந்தது.
ஜூட் ஷ்ரமந்த ஜெயமஹா நாடு கடத்துமாறு இலங்கை அதிகாரிகள் சிங்கப்பூரிடம் ஆரம்பத்தில் கோரிய போதிலும், சிங்கப்பூர் அதிகாரிகள் – தற்போது அவர் தங்கள் நாட்டில் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக சட்டமா அதிபர் தரப்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி சஜித் பண்டார தெரிவித்தார்.
ஜூட் ஷ்ரமந்த ஜெயமஹாவின் தற்போதைய இருப்பிடத்தைக் கண்டறிய சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
நீதிமன்றம் உத்தரவு வழங்கி சுமார் ஒரு வருடம் கழித்து – அவரைக் கண்டுபிடிப்பதில் முன்னேற்றம் இல்லாமை குறித்து – நீதிபதிகள் எஸ். துரைராஜா, யசந்த கோடாகொட மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய அமர்வு அதிருப்தி தெரிவித்தது.
வழக்கு தொடர்பான ஆவணத்தை மீட்டெடுப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக தாமதங்கள் ஏற்பட்டாலும், அவரைக் கைது செய்வதற்கான பிடியாணையைப் பெறுவதற்குரிய முயற்சிகள் நடந்து வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ஜூலை 28ஆம் திகதி குறித்த மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், வழக்கின் முன்னேற்றம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் அறிக்கை வழங்க வேண்டும் எனவுவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது இவ்வாறிருக்க, மரண தண்டனைக் கைதி ஜூட் ஷ்ரமந்த ஜெயமஹாவுக்கு மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பு ரத்து செய்யப்பட்ட பின்னர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விதிக்கப்பட்ட ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீட்டை, அவர் முழுமையாக செலுத்திவிட்டதாக உச்ச நீதிமன்றத்திற்கு இன்று (29) தெரிவிக்கப்பட்டது.
கொழும்பு ராஜகிரிய றோயல் பார்க் வீடமைப்பு தொகுதியில் இவோன் ஜோன்சன் என்ற 19 வயது யுவதியை 2005ஆம் ஆண்டு கொலை செய்த குற்றத்துக்காக, ஜூட் ஜயமஹாவுக்கு 2012ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.



