கண் விடுத்தல்

🕔 February 19, 2016

Article - 68 - 01
மு
ஸ்லிம் கட்சிகளின் ஒன்றிணைவு குறித்து சமீப காலமாக திடீர் கோசமொன்று மேலெழத் துவங்கியுள்ளது. முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக ஒற்றுமைப்பட வேண்டும் என்பதும், அந்த ஒற்றுமையின் மூலம் சமூகத்துக்கு நல்லவை ஏதாவது நடக்க வேண்டும் என்கிற அவாவும் கொண்டவர்கள், நீண்ட காலமாகவே முஸ்லிம் அரசியல் கட்சிகளினதும், தலைவர்களுடையதும் ஒற்றுமை பற்றி வலியுறுத்தி வந்துள்ளனர். ஆனால், மேற்சொன்ன திடீர் கோசம் வேறு மாதிரியானது. அரசியலுக்குப் பின்னாலுள்ள இன்னுமொரு அரசியலின் குரலாகவே அது தெரிகிறது.

முஸ்லிம் அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதெல்லாம் அதனை, கண்களை மூடிக்கொண்டு புறங்கையினால் தட்டிக் கழித்தவர்களுக்கு, இப்போது கண் விடுக்கத் துவங்கியமைக்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை.

முஸ்லிம் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்கிற கோரிக்கையானது – இப்போது அரசியல் இயங்கு தளத்தில் இல்லாத, முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவுக்கான களம் ஒன்றினைப் பெற்றுக் கொடுப்பதற்குரிய முனைப்பு போலவும் தெரிகிறது.

காடுகளை இழந்த சிங்கங்களுக்கு, ஒரு புதரினையாவது பெற்றுக்கொடுப்பதற்குரிய முயற்சியாக – முஸ்லிம் கட்சிகளின் ஒன்றிணைவு எனும் திடீர் கோசத்தினை, சிலர் கையில் எடுத்திருக்கிறார்களோ என்கிற ஐயப்பாடும் பலரிடையே ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம் அரசியல் கட்சிகளின் ஒன்றினைவு என்பதன் அவசியத்தை மறுப்பது அல்லது மலினப்படுத்துவது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. ஆனால், அவ்வாறான ஒரு பொது நோக்கத்தை, தமது அரசியலுக்காக யாரும் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதையும், அவ்வாறு பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

முஸ்லிம் அரசியல் கட்சிகள் என்று பார்த்தால் ஒன்றிரண்டு மட்டுமே உள்ளன. குறிப்பாக இயங்கு நிலையில் உள்ள கட்சிகள் என்றால் முஸ்லிம் காங்கிரசும், அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அ.இ.ம.காங்கிரசும்தான் இருக்கின்றன. ஆனால், இந்தப் பட்டியலில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரசையும் சிலர் சேர்க்கின்றனர். அப்படிச் சேர்ப்பதில் தவறொன்றும் இல்லை. ஆனால், அதாஉல்லாவுக்கும், அவரின் கட்சிக்கும் மீள் பிரவேசம் ஒன்றிணைப் பெற்றுக் கொடுப்பதற்காகத்தான் இந்தப்பட்டியலே போடப்படுகிறது போல் தெரிவதுதான் உறுத்தலாக உள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்கிற மகுடத்தின் கீழ் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுகின்றமை போல, முஸ்லிம் கட்சிகள் ஏன் ஒன்றிணைந்து செயற்படக் கூடாது அல்லது முடியாது என்பது, முஸ்லிம் சமூகத்தின் நலன் குறித்து யோசிக்கின்றவர்களின் ஆதங்கமாகும். ஆனால், இதிலுள்ள சிக்கல்களையெல்லாம் கணக்குப் போட்டுப் பார்க்கும் போது, முஸ்லிம் அரசியல் கட்சிகளின் ஒன்றிணைவு சாத்தியப்படுவதற்கான நிகழ்தகவுகள் இப்போதைக்கு மிகவும் குறைவாகவே உள்ளன.

ஏற்கனவே, ஊவா மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரசும், அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் கூட்டிணைந்து போட்டியிட்டமை இங்கு நினைவு கொள்ளத்தக்கது. நுஆ எனப்படுகின்ற தேசிய ஐக்கிய முன்னணியின் இரட்டை இலைச் சின்னத்தில், இரண்டு கட்சிகளும் ஒன்றுபட்டு தேர்தல் களத்தில் குதித்தன.

இந்த ஒற்றுமை பற்றி அப்போது கணிசமானோர் சிலாகித்துப் பேசினார்கள். முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒன்றிணைவதற்கான ஆரம்பப் புள்ளியாக அந்த முயற்சியினை பலரும் பார்த்தனர். ஆனால், அவ்வாறான எதிர்பார்ப்புகளில் இறுதியாக மண்தான் விழுந்தது.

ஊவா மாகாண சபைக்கான தேர்தல் களத்தில், ஒரே மேடையில் அருகருகே வீற்றிருந்த மு.கா. தலைவர் ஹக்கீமும், அ.இ.ம.காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுத்தீனும் தேர்தலின் பின்னர், மறுபடியும் கீரியும் – பாம்பும் ஆகினர். மீண்டும்; ஒருவர் மீது ஒருவர் கோபத்தினையும், கசப்பினையும் மனதில் சுமந்து கொண்டு தமது பாசறைகளுக்குத் திரும்பினார்கள்.

ஊவா மாகாண சபைத் தேர்தலில் மு.காங்கிசும், அகில இலங்கை மக்கள் காங்கிரசும் இணைந்து களமிறங்கியபோது, மு.கா. தலைவர் ஹக்கீம் அந்த ஒன்றிணைவுக்காக சில விடயங்களை விட்டுக் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. றிசாத் பதியுத்தீனின் கட்சியோடு ஒப்பிடும்போது முஸ்லிம் காங்கிரஸ் பிரமாண்டமானது. ஆயினும், அந்தத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனது மரச் சின்னத்தில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தினை விட்டுக் கொடுத்து, அமைச்சர் றிசாத்தின் கட்சியோடு இணைந்து, வேறொரு கட்சியான நுஆவின் இரட்டை இலைச் சின்னத்தில் களமிறங்குவதற்குச் சம்மதித்திருந்தது.

ஆனால், மு.கா. தலைவரின் இந்த முடிவு தொடர்பில் அந்தக் கட்சிக்குள் கணிசமானோர் அதிருப்தி கொண்டிருந்தனர். மு.காவிலிருந்து பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்த றிசாத் பதியுத்தீனுக்காக, மு.காங்கிரஸ் தனது மரச் சின்னத்தினை ஊவா மாகாண சபைத் தேர்தலில் விட்டுக் கொடுத்திருக்கக் கூடாது என்று, மு.காங்கிரசின் முக்கியஸ்தர்கள் பலரும் அப்போது அதிருப்தி வெளியிட்டிருந்தனர்.

ஆனாலும், அந்தக் கூட்டிணைவு வெற்றியளிக்கவில்லை. அந்தக் கூட்டிணைவில் பொது நோக்கம் இருக்கவில்லை. குறுகிய அரசியல் லாபங்களுக்காகவே அந்தக் கூட்டு இடம்பெற்றது என்பதை பின்னர் அறிந்து கொள்ள முடிந்தது.

அதாஉல்லா அமைச்சுப் பதவியில் இருந்த காலத்திலும், முஸ்லிம் கட்சிகளின் ஒன்றிணைவு தொடர்பில் முஸ்லிம் புத்தி ஜீவிகள், ஊடகவியலாளர்கள் என்று பல தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். ஆனால், அதனை அதாஉல்லா மமதையுடனும், அலட்சியத்துடனும் தட்டிக் கழித்துக் கொண்டு வந்தார்.

மு.கா. தலைவர் ஹக்கீமுடனும், ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் ஒருபோதும் அரசியல் ரீதியாக இணைய முடியாது என்று, முன்னாள் அமைச்சர் அதாஉல்லா பல தடவை மிகப் பகிரங்கமாகக் கூறியிருந்தார். அரசியல் பற்றிய அவரின் புரிதல் அவ்வாறுதான் இருந்தது. ‘சாத்தியமானவற்றினைச் சாதிக்கும் கலைதான் அரசியல்’ என்பதை அவர் விளங்கியிருந்தால், அப்படிக் கூறியிருக்கவும் மாட்டார், தற்போதைய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கவும் மாட்டார்.

தமிழ் கட்சிகளில் கணிசமானவை, தமிழ் தேசிய கூட்டமைப்பு என்கிற பெயரில் ஒன்றிணைந்துள்ள போதிலும், அந்தக் கட்சி பதிவு செய்யப்படாமை காரணமாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்திலேயே தேர்தல்களில் களமிறங்கி வருகின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் கீழ் ஒன்றிணைந்துள்ள தமிழ் கட்சிகளில் மூத்ததும், பெரியதுமான கட்சியென்றால் இலங்கை தமிழரசுக் கட்சிதான். அதனால், எவ்வித வாதப் பிரதிவாதங்களுமில்லாம், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து, இலங்கை தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் தேர்தல்களின்போது களமிறங்குகின்றன.

சிலவேளைகளில், முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுதவற்கு சம்மதித்தால் கூட, தேர்தல்களில் போட்டியிடும் சின்னம் தொடர்பில் அந்தக் கட்சிகளுக்கிடையில் பாரியதொரு இழுபறி இடம்பெறும். தற்போது இயங்கு நிலையிலுள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகளில் மூத்ததும், பெரியதுமான கட்சியென்றால் மு.காங்கிரஸ்தான். அப்படிப்பார்த்தால், ஒன்றிணையும் முஸ்லிம் கட்சிகள், தேர்தல்களில் முஸ்லிம் காங்கிரசின் மரச்சின்னத்தில் போட்டியிடுவதற்குச் சம்மதிக்குமா என்பது சந்தேகம்தான்.

இன்னொருபுறம், தேர்தல்களைக் குறிவைத்து முஸ்லிம் கட்சிகள் கூட்டு வைத்துக் கொள்தல் என்பது, முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கும் அரசியல் ஒன்றிணைவாக அமையாது. தேர்தல்களுக்காக மட்டும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து கொள்ளுமானால், அந்த செயற்பாட்டினை அரசியல் விபசாரம் என்று அழைப்பதே மிகவும் பொருத்தமாக அமையும்.

எனவே, முஸ்லிம் கட்சிகள் இணைந்து செயற்பட வேண்டிய தேவை எதற்கானது என்பது குறித்து முதலில் தெளிவுகளையும், உடன்பாட்டினையும் எட்டுதல் அவசியமாகும். வெறுமனே நாடாளுமன்றில் கொஞ்சம் அதிகப்படியான முஸ்லிம் உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் இந்தக் கூட்டிணைவு பற்றி கணிசமானோர் யோசிக்கின்றனர்.

ஆனால், முஸ்லிம்களின் குரல் திரண்டு, உரத்த தொனியில் ஒலிக்க வேண்டும் என்பதற்காகத்தான், முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று முஸ்லிம் சமூகம் விரும்புகிறது.

இது இவ்வாறிருக்க, முஸ்லிம் அரசியல் கட்சிகளும், தலைவர்களும் ஒன்றிணையக் கூடாது என்று, முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அடிக்கடி அரசியல் மேடைகளில் பேசுவதுண்டு. முஸ்லிம் சமூகம் தனது முட்டைகளையெல்லாம் ஒரே கூடையில் வைத்திருக்கக் கூடாது என்று, அவர் அடிக்கடி கூறுவார். ஆனால், இப்போது இந்தக் கருத்தில் அதாஉல்லா மாறியிருப்பார் போலதான் தெரிகிறது. அவ்வாறில்லா விட்டால், அவருக்கு சார்பான குரல்கள் இப்போது முஸ்லிம் அரசியல் கட்சிகளின் ஒன்றிணைவுகள் பற்றியும், அதில் அதாஉல்லாவின் தேசிய காங்கிரசை உள்வாங்க வேண்டிய தேவை குறித்தும் பேசிக் கொண்டிருக்கப் போவதில்லை.

இன்னொருபுறம், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் கூட்டிணைவு என்பது, பெருந் தேசியக் கட்சிகளுக்கு சந்தோசமானதொரு சமாச்சாரமாக இருக்கவும் போவதில்லை. முஸ்லிம் சமூகத்தின் குரல் அரசியல் ரீதியில் திரட்சியாக ஒன்றுபட்டு ஒலிக்கும் போது, அரசுக்கும், பெருந்தேசியக் கட்சிகளுக்கும் பல்வேறு விதமான நெருக்கடிகள் ஏற்படும்.

தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்தமை காரணமாக விரும்பியோ விரும்பாமலோ, அவர்களுக்கு நாடாளுமன்றில் எதிர்க்கட்சி என்கிற பாரிய அந்தஸ்தினைத் தூக்கிக் கொடுக்க வேண்டியதொரு நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளமை கவனத்துக்குரியது. மட்டுமன்றி, புலிகளின் காலத்தில் சர்வதேச ரீதியாக இலங்கைத் தமிழர் தரப்பு பெற்றுக் கொள்ளத் தவறிய அரசியல் சந்தர்ப்பங்களை, இப்போது தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவின் மூலம் தமிழ் தேசிக் கூட்டமைப்பு பெற்றுக் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழர் பக்கம் சர்வதேசத்தின் அரசியல் கவனம் திரும்பியிருப்பது – சிங்கள அரசுக்கு பாரியதொரு தலைவலியாகும்.

இதுபோல், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் ஒன்றிணைவானது மற்றுமொரு தலைவலியை தமக்கு ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில், நிச்சயம் சிங்கள அரசு கவனமாகவே இருக்கும்.

ஆனால், முஸ்லிம் சமூகத்தின் தலையில் – வேறு யாராவது வந்துதான் மண் வாரிப் போட வேண்டும் என்கிற தேவை எதுவும் கிடையாது. முஸ்லிம் சமூகம், தனது தலையில் – தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளும் நிலையில்தான் இப்போது உள்ளது.

முஸ்லிம் சமூகத்தில் பிளவுகளும், பிரிவுகளும் அனைத்து விடயங்களிலும் தலைவிரித்து ஆடுகின்றன. சமய விடங்கள் தொடக்கம் சடங்குகளை நிறைவேற்றுகின்றமை வரை, அனைத்திலும் பிளவுகள். எல்லாவற்றிலும் ஆயிரத்தெட்டு இயக்கங்கள், அமைப்புக்கள். ஒரு நோன்புப் பெருநாளை அல்லது ஹஜ்ஜுப் பெருநாளை ஒரே தினத்தில் ஒன்றிணைந்து கொண்டாட முடியாத முஸ்லிம் சமூகம், அரசியல் ரீதியாக ஒன்றிணைந்து தமது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்குமா என்று கேட்டால், எந்த தைரியத்தில் ஆம் என்று சொல்வது?

தற்போது, புதிய அரசியல் யாப்பு தொடர்பிலான பேச்சுக்களும், கலந்துரையாடல்களும், கருத்துக்களைப் பெற்றுக் கொள்ளும் முயற்சிகளும் பாரியளவில் இடம்பெற்று வருகின்றன. இந்த விடயத்தினை முன்னிறுத்தியாவது முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து, முஸ்லிம் சமூகம் சார்பான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க முடியும். ஆனால், அது தொடர்பில் எந்தவொரு முஸ்லிம் கட்சியும் தமது கால்களை முன்னெடுத்து வைக்கவில்லை.

ஆக, முஸ்லிம் சமூகம் சார்பான முக்கிய விடயங்களில் ஒற்றுமைப்படாத, படமுடியாத அரசியல் கட்சிகளும், தலைவர்களும் – தமது கிறீடங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும், களவு போன கதிரைகளைக் கைப்பற்றிக் கொள்வதற்காகவும் ஒற்றுமைப்பட முயற்சிப்பார்களாயின், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

முஸ்லிம் அரசியல் கட்சிகளின் அவ்வாறான கூட்டிணைவு பற்றிய எத்தனைங்களை, காறி உமிழ்ந்து கண்டிக்க வேண்டும்.

நன்றி: ‘தமிழ் மிரர் பத்திரிகை’ (16 பெப்ரவரி 2016)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்