லசந்த கொலையாளி, கப்டன் திஸ்ஸ? ஒத்துப் போகும் உருவமும், வலுக்கும் சந்தேகங்களும்
சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலையுடன், ராணுவ அதிகாரியான கப்டன் திஸ்ஸ விமலசேன தொடர்புபட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளில் ஒருவராக கப்டன் திஸ்ஸ விமலசேன செயற்பட்டு வந்தார்.
லசந்த விக்கிரமதுங்கவின் கொலையாளிகள் இருவரின் உருவப்படங்கள் நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வெளியிடப்பட்டதோடு, அவை தொடர்பில் பொதுமக்களிடம் தகவல்களும் கோரப்பட்டிருந்தன.
இந்த நிலையில், குறித்த உருவப்படங்களில் ஒன்று, கப்டன் திஸ்ஸவின் முக அமைப்பினை ஒத்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரபல றக்பி வீரர் வசீம் தாஜுத்தீன் கொலையிலும், கப்டன் திஸ்ஸ விமலசேன சந்தேகிக்கப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க, பணச் சலவைக் குற்றச்சாட்டிலும் கட்டன் திஸ்ஸவுக்கு எதிராக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
அண்மையில், இவர் உள்ளிட்ட சிலரின் வங்கி நடவடிக்கைகள் தொடர்பில் அறிக்கைகளை சமர்பிக்குமாறு, இலங்கையிலுள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டிருந்தமையும் நினைவுகொள்ளத்தக்கது.
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க 2009 ம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதி, அவரின் வீட்டிலிருந்து வானத்தில் புறப்பட்டுச் சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.