
மாலைதீவுக்குள் இஸ்ரேலியர்கள் நுழைவற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காஸா மீதான இஸ்ரேலின் போருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பலஸ்தீன மக்களுடனான ‘உறுதியான ஒற்றுமையை’ வெளிப்படுத்தும் வகையிலும், இந்த முடிவை மாலைதீவு எடுத்துள்ளது.
மாலைதீவு நாடாளுமன்றம் ‘மக்கள் மஜ்லிஸ்’ இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னர், ஜனாதிபதி முகமது முய்சு திங்களன்று இந்தச் சட்டத்தில் கையெழுத்திட்டார்.
பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களை நிறுத்தும் வரை, இஸ்ரேலிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் அனைவரையும் அந்த நாட்டில் நுழைவதற்கு தடை விதிப்பதற்கு ஜூன் 2024 இல் அமைச்சரவை ஆரம்பத்தில் முடிவு செய்தது.
“பலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் அட்டூழியங்கள் மற்றும் இனப்படுகொலை செயல்களுக்கு பதிலளிக்கும் விதமாக அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டை இந்த அங்கிகாரம் பிரதிபலிக்கிறது” என்று ஜனாதிபதி முய்சுவின் அலுவலகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலை 1,129 தீவுகளால் ஆன ஒரு இஸ்லாமிய குடியரசுநாடாகும். இது உலகின் முதன்மையான கடற்கரை சுற்றுலா இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இஸ்ரேலியர்கள் மீது மாலைதீவு பயணத் தடை விதிப்பது இது முதல் முறை அல்ல. 1965ஆம் ஆண்டில் இஸ்ரேல் தீவு தேசத்தை அங்கீகரித்து, ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியது. ஆனால் அது 1974 இல் இடைநிறுத்தப்பட்டன.
இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் மீதான தடை 1990 களில் நீக்கப்பட்டது. மேலும் 2009இல், மாலைதீவும் இஸ்ரேலும் உறவுகளை மேம்படுத்த பல ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இருப்பினும், 2018ஆம் ஆண்டில், புதிய தலைமையின் கீழ், அந்த ஒப்பந்தங்கள் ரத்துச் செய்யப்பட்டன. அதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் மோசமடைந்தன.
மாலைதீவு சுற்றுலா அமைச்சின் கூற்றுப்படி, 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 528 இஸ்ரேலியர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இது 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 4,644 ஆக இருந்ததை விட 89 சதவீதம் குறைவு.
அரசாங்க தரவுகளின்படி, இந்த பெப்ரவரியில் 200,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மாலைதீவுக்கு வருகை தந்தனர். அவர்களில் 59 பேர் இஸ்ரேலியர்கள்.



