
பெருந்தொகையான கொகைன் போதைப்பொருளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து – இந்தியப் பெண் ஒருவர் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் ரூ. 65,760,000 மதிப்புள்ள போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முயன்றபோது இவர் கைதாகியுள்ளார்.
இந்தியா – மிசோரம் பிரதேசத்தைச் சேர்ந்த சமையல்காரரான 29 வயது சந்தேக நபர், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அவரின் கடவுச் சீட்டிலுள்ள தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில், அவர் இதற்கு முன்பு மூன்று முறை இலங்கைக்கு வருகை தந்திருப்பது தெரியவந்துள்ளது.
அவர் இன்று அதிகாலை இந்தியாவின் சென்னையில் இருந்து இலங்கை வந்திருந்தார்.
PNB அதிகாரிகளுக்குக் கிடைத்த உளவுத்துறை தகவலின் அடிப்படையில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டது, மேலும் அவர் கொண்டு வந்த சூட்கேஸின் போலி அடிப்பகுதியில், பாலிதீன் பேக்கேஜிங்கில் சுற்றப்பட்டு மொத்தம் 1 கிலோகிராம் 644 கிராம் கோகைன் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை அளித்த தகவலின் அடிப்படையில், கொகைன் சரக்கைப் பெறத் தயாராக இருந்த இலங்கை நபரும் இன்று மதியம் 1.30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
இலங்கையில் இந்தியப் பெண் தங்குவதற்கு ஏற்பாடாகியிருந்த கொள்ளுப்பிட்டியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் காத்திருந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.
உள்ளூர் சந்தேக நபர் மாலபேயைச் சேர்ந்த 50 வயதுடைய தொழிலதிபர் ஆவார்.



