
கம்பஹா – அகரவிட்ட பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர், துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (8) மாலை 6:45 மணியளவில் நடந்துள்ளது.
மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் கடையில் இரண்டு நபர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் 30 மற்றும் 34 வயதுடையவர்கள், கடையின் உரிமையாளர் சாமர நதி சதருவன் மற்றும் கடையின் உதவியாளர் அசித தேவிந்த என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் கட்டுகஸ்தர மற்றும் யக்கல பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடையின் உரிமையாளரான சாமர நதி சதருவன் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், ‘கெஹல்பத்தர பத்மே; என்று அழைக்கப்படும் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினருடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுக்கடை நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவ என்பவருக்காக போதைப்பொருள் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தம்மித சுமித் என்பவரால் – சதருவன் மிரட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதருவன் மிரட்டப்பட்டு, அவரது போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளை நிறுத்துமாறு கூறப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தகராறு தொடர்பாக தம்மித சுமித்தின் வழிகாட்டுதலின் கீழ், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
09எம்.எம் துப்பாக்கியைப் பயன்படுத்தி – தாக்குதல் நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.



