
வெலிகமவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்து ஆஜர்படுத்துமாறு, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசபந்து தென்னகோன் உட்பட எட்டு பொலிஸ் அதிகாரிகளை வழக்கில் சந்தேக நபர்களாக ஆஜர்படுத்த குற்றப் புலனாய்வுத் துறை நடவடிக்கை எடுக்கும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 31, 2023 அன்று வெலிகமவில் உள்ள W15 ஹோட்டல் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் – ஒரு பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்டதோடு மற்றொருவர் காயமடைந்தார்.
இறந்த மற்றும் காயமடைந்த பொலிஸ் அதிகாரிகள் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
வெலிகமவுக்கு அனுப்பப்பட்ட கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சட்டவிரோதமாக – அங்கு அனுப்பப்பட்டதாக, மாத்தறை நீதவான் கண்டறிந்தமையினை அடுத்து, மேற்படி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.



