
முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன 01 ஜனவரி 2024 முதல் 24 செப்டம்பர் 2024 வரை ஒன்பது மாதங்களுக்குள் 33 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள எரிபொருளைப் பயன்படுத்தியுள்ளார். அதாவது, மாதத்துக்கு 40 லட்சம் ரூபாய் எரிபொருளுக்காக செலவு செய்துள்ளார் என்று, சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க இன்று (27) நாடாளுமுன்றில் தெரிவித்தார்.
ஆனால், தற்போதைய சபாநாயகர் ஜனவரி மாதத்திற்கு எரிபொருளுக்காக 218,000 ரூபாய் மட்டுமே செலவிட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.
முன்னாள் சபாநாயகர் ஒன்பது வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளார் என்றும், ஒன்பது மாதங்களுக்கான அவரின் எரிபொருள் செலவு 33 மில்லியன் ரூபாய் என்றும், பிரதி சபாநாயகர் 06 வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளார் என்றும், அதற்காக 13.5 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
முன்னாள் குழுக்களின் பிரதித் தலைவர்கள் நான்கு வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளனர் என்றும், 7.2 மில்லியன் ரூபாய் எரிபொருளுக்காக செலவிட்டுள்ளனர் என்றும் கூறினார்.
தற்போதைய பிரதி சபாநாயகர் ஜனவரி மாதத்திற்கு எரிபொருளுக்காக 23,000 ரூபாய் மட்டுமே பயன்படுத்தியுள்ளார் என்றும், குழுக்களின் பிரதித் தலைவர்கள் ஜனவரி மாதத்திற்கு எரிபொருளுக்காக 81,000 ரூபாய் பயன்படுத்தியுள்ளனர் என்றும் பிமல் ரத்நாயக்க தகவல் வெளியிட்டார்.
பணியாளர் ஆலோசனைக் குழுவின் முடிவின் பேரில் நடத்தப்பட்ட கணக்காய்வு மூலம் இந்தத் தகவல் தெரியவந்ததாக அவர் கூறினார்.
சபாநாயகரின் பங்களாவைப் பராமரிக்க 70 ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தமை தெரியவந்ததாகவும் அவர் கூறினார். முன்னாள் சபாநாயகரின் பங்களாவின் உணவுச் செலவு 2023 இல் 2.6 மில்லியன் ரூபாயாகவும், 2024 இல் 3.6 மில்லியன் ரூபாயாகவும் இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய சபாநாயகருக்கு -ஜனவரி மாதத்திற்கான உணவுச் செலவு 33,000 ரூபாய் மட்டுமே என்றும் அமைச்சர் தெரிவித்தார்.



