
மின்சார இணைப்புகளை வழங்கும்போது அனைத்து பாவனையாளர்களிடமிருந்தும் வசூலிக்கப்படும் பாதுகாப்பு வைப்புத்தொகைக்கான வருடாந்த வட்டியை, இலங்கை மின்சார சபைசெலுத்த வேண்டும் என்று – உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், அரசுக்கு சொந்தமான மின்சார வழங்குநர், இலங்கை மத்திய வங்கியால் செலுத்தப்படும் வருடாந்த வட்டியில் 11.67% ஐ வீட்டு நுகர்வோர் உட்பட – அனைத்து வகை மின்சார நுகர்வோருக்கும் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
இலங்கை மின்சார சபையின் மின்சார நுகர்வோர் சங்கம், அதன் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் இந்த அடிப்படை உரிமைகள் மனுவை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவில் இலங்கை மின்சார சபை சட்டத்தின் பிரிவு 28/III இன் கீழ், மேற்படி வருடாந்த வட்டியை வழங்க உத்தரவிடக் கோரப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சு மற்றும் அமைச்சர், இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை வழக்கின் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.



