
முன்னாள் ஜனாதிபதிகள் பல்வேறு குற்றங்களைப் புரிவதற்காக, பாதாள உலக நபர்களைப் பயன்படுத்தியுள்ளனர் என்று – பொது பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல இன்று (28) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன – கொனவல சுனிலைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்ற நீதிபதியின் வீட்டின் மீது கல் எறிந்தார். மறைந்த ஜனாதிபதி ஆர். பிரேமதாச, பத்திரிகையாளர் ரிச்சர்ட் டி சொய்சாவைக் கடத்தி கொலை செய்ய – பாதாள உலக நபர்களைப் பயன்படுத்தினார்.
ரிச்சர்ட் சொய்சாவைப் பற்றிய ராணி திரைப்படம் இன்று திரையிடப்படுகிறது. இந்தப் படத்தை ரகசியமாகப் பார்த்து, ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தன்னுடைய தந்தை என்ன செய்தார் என்பதைக் கண்டறியுமாறு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கூற விரும்புகிறேன்” என்றும் சுனில் வட்டகல கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ – பாதாள உலக நபர்களான ஜூலம்பிட்டியே அமர மற்றும் வம்பொட்டவுடன் தொடர்புடையவர். ஜூலம்பிட்டியே அமர – ஒரு காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் மெய்பாதுகாவலராக இருந்தார்”என்றும் அவர் தெரிவித்தார்.



