
– தில்சாத் பர்வீஸ் –
அம்பாறை மாவட்டம் தொழில் பயிற்சி நிலையத்தின் கீழ் பணிபுரியும் தமிழ் மொழி மூலமான போதனா ஆசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், நிந்தவூரில் இன்று (17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்பாறை மாவட்ட ஒன்றிணைந்த சுதந்திர தொழில்சங்க மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில், நிந்தவூர் தொழில் பயிற்சி நிலையத்தின் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட தொழில் பயிற்சி நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் டி. வினோதராஜாவை இடமாற்றுமாறு – இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட தொழில் பயிற்சி நிலையத்தின் கீழ் பணிபுரியும் போதனா ஆசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் – தம்மீது அடக்குமுறையைப் பிரயோகிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் குற்றம் சுமத்தினர்.
இதுதொடர்பாக அம்பாறை மாவட்ட தொழில் பயிற்சி நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் டி. வினோதராஜாவை தொடர்பு கொண்டு வினவியபோது ” கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றாத சில ஆசிரியர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டதால் அத்தகைய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக” அவர் தெரிவித்தார்.




