தலைப்புச் செய்திகள்

மோசடியாக பரீட்சை எழுதிய குற்றச்சாட்டு தொடர்பில், நாமலுக்கு எதிராக சிஐடி விசாரணை

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலங்கை சட்டக் கல்லூரி பரீட்சையை சட்டவிரோதமாக எழுதியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, குற்றப் புலனாய்வு பிரிவு (சிஐடி) விசாரணையைத் தொடங்கியுள்ளது.

லஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்துக்கு எதிரான ‘புரவெசி பலயா’ (குடிமகனின் அதிகாரம்) என்ற அமைப்பு செய்த முறைப்பாட்டுக்கு அமைய,விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு சட்டத்தரணிகளின் உதவியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜபக்ஷ – சட்டவிரோதமாக தனது சட்டத்தரணி பரீட்சையை எழுதியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி – முழுமையான விசாரணையை நடத்துமாறு சிஐடியின் பணிப்பாளருக்கு பதில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கு அமைவாகவே, சிஐடி விசாரணையைத் தொடங்கியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.