
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம இல்லத்தின் ஒரு பகுதிக்கான நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகி வரும் செய்திகள் பொய்யானவை என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்துக்கான நீர் விநியோகத்தில் எந்த தடங்கலும் இல்லை என்று – நீர் வழங்கல் அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் பாதுகாப்புப் பணியாளர்கள் பலர் வசித்து வந்த – அவரின் இல்லத்திற்கு அருகிலுள்ள ஒரு இடத்துக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பணியாளர்கள் 2024 ஒக்டோபரில் குறித்த இடத்தை காலி செய்துவிட்டனர். மேலும் அந்த இடத்துக்கான நீர்ப் பாவனைக் கட்டணங்களை ஜனாதிபதி செயலகம் செலுத்தி வந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்த இடத்துக்கான நீர்க் கட்டணத்தின் நிலுவைத் தொகையை செலுத்தி முடிக்குமாறு ஜனாதிபதி செயலகத்திற்கு பல தடவை கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் நீர் வழங்கல் அதிகாரசபை அந்த அறிக்கையில் விவரித்துள்ளது.
குறித்த இடத்துக்குச் செலுத்தப்படாத நீர் கட்டணமாக சுமார் 429,000 உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



