தலைப்புச் செய்திகள்

இலங்கையின் கலாசாரத்தை அழித்து, மக்கள் தொகையைக் குறைக்க USAID நிதியளித்தது: விமல் குற்றச்சாட்டு

இலங்கையின் கலாசாரத்தை அழித்து, மக்கள் தொகையைக் குறைக்க வடிவமைக்கப்பட்ட திட்டங்களுக்கு 7.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை USAID செலவிட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.

“எலான் மஸ்க்கின் கூற்றுப்படி, இலங்கை திட்டங்களுக்கு 7.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 2400 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகை ” என்று, ஊடக சந்திப்பொன்றில் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் USAID நிதியை நிறுத்துவதில் எலான் மஸ்க் தனிப்பட்ட முறையில் தலையிட்டதாகவும், பாலின மாற்றத்துக்கு USAID நிதியளிக்கும் அமைப்புகள் ஆதரவளிப்பதை எலான் மஸ்கின் மகன் வெளிப்படுத்தியதால் – USAID நிதி வழங்கும் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விமல் வீரவன்ச குற்றம் தெரிவித்துள்ளார்.

“அவர்கள் பல்வேறு வகையான மாற்றங்களை ஊக்குவித்தனர். குறிப்பாக இளைஞர்களிடையே LGBTQ சமூகத்தை மேம்படுத்துவது தொடர்பான மாற்றம். இலங்கைக்கு USAID வழங்கிய 7.9 மில்லியன் டொலர் என்பது ஒரு பெரிய தொகை” எனவும் அவர் கூறினார். இந்த திட்டங்கள் பாலின மாற்றத்தை ஊக்குவிக்கவும் இறுதியில் மக்கள் தொகையைக் குறைக்கவும் வடிவமைக்கப்பட்டவை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

“உலகம் அதிக மக்கள் தொகை கொண்டது, எனவே நோய்களை உருவாக்குவதன் மூலம் அதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பில் கேட்ஸ் ஒருமுறை கூறினார். நோய்களைக் குணப்படுத்த தடுப்பூசிகள் தேவை” என்று குறிப்பட்ட விமல் வீரவன்ச, இது வணிகங்களை மேம்படுத்துவதற்கான ஒரு சதி என்று குற்றம் சாட்டினார்.

USAIDஇன் நிதி – இலங்கை ஊடகவியலாளர்களுக்கு பாலின வேறுபாடுகளைக் கற்பிக்க செலவிடப்பட்டதாகவும் அவர் கூறினார்.

எந்த ஊடக நிறுவனங்கள் இந்த நடவடிக்கைகளுக்கு எவ்வளவு நிதியைப் பெற்றன என்பதை வெளிப்படுத்துமாறு அரசாங்கத்தையும் எதிர்க்கட்சியையும் தாங்கள் வலியுறுத்துவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

“இந்த நாட்டின் மக்களுக்கு மட்டுமல்ல, அரசியல் தலைவர்களுக்கும் நமது கலாச்சாரத்தை அழிக்க வடிவமைக்கப்பட்ட இந்த முயற்சிகள் மூலம் நிதி வழங்கப்பட்டது” என்று கூறிய விமல் வீரவன்ச, எதிர்காலத்தில் அவர்களின் பெயர்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் – வெளிநாடுகளுக்கு அமெரிக்கா வழங்கும் நிதியுதவிகளை முடக்கியுள்ள நிலையில், விமல் வீரவன்ச இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இதையும் பாருங்கள்