தலைப்புச் செய்திகள்

ஐக்கிய அரபு ராச்சியம் சென்றுள்ள ஜனாதிபதிக்கு வரவேற்பு

க்கிய அரபு ராச்சியத்துக்கு சென்றுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு, அந்த நாட்டின் வெளிநாட்டு, வர்த்தகத் துறை ராஜாங்க அமைச்சர் கலாநிதி தானி பின் அஹமட் அல் செய்யூத் உள்ளிட்ட அரச பிரதிநிதிகள் வரவேற்பளித்தனர்.

ஐக்கிய அரபு ராச்சியத்தின் டுபாயில் பெப்ரவரி 11 முதல் 13 வரை நடைபெறும் 2025 சர்வதேச அரச உச்சி மாநாட்டில் (WGS) பங்கேற்பதற்காக, இன்று (10) நாட்டிலிருந்து ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் புறப்பட்டனர்.

ஐக்கிய அரபு ராச்சியம் சென்றடைந்த ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில், ஐக்கிய அரபு ராச்சிய பதில் தூதுவர் தக்ஷிலா ஆர்னோல்டா, டுபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸிற்கான இலங்கை கொன்சூலர் ஜெனரல் அலெக்ஸி குணசேகர உள்ளிட்ட டுபாயில் உள்ள இலங்கை தூதரக பிரதிநிதிகள் குழுவினரும் கலந்து கொண்டனர்.

இன்று பிற்பகல் மாஸ்டர் இன்வெஸ்ட்மென்ட் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், ராஸ் அல் கைமா ஆட்சியாளரின் மருமகனுமான ஷேக் அப்துல்லா பின் முஹம்மது அல் காசிமியை ஜனாதிபதி சந்திப்பதாகவும், இலங்கைக்கும் ஐக்கிய அரபு ராச்சியத்திற்கும் இடையிலான பொருளாதார மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.