
இறக்குமதி செய்யப்படும் உப்பின் விலை அதிகரித்துள்ளதாக, ஹம்பாந்தோட்டையில் உள்ள லங்கா உப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
400 கிராம் பாக்கெட்டின் விலை100ல் இருந்து 120 ரூபாயாகவும், ஒரு கிலோகிராம் கிரிஸ்டல் உப்பு பாக்கெட்டின் விலை 120ல் இருந்து 180 ரூபாயாகவும் உயர்ந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த விலை மாற்றம் ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
இலங்கையின் வருடாந்த உப்பு தேவை கிட்டத்தட்ட 20,000 மெட்ரிக் தொன்களாக உள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டின் இறுதி காலாண்டில் ஏற்பட்ட பாதகமான வானிலையால் – உள்ளூர் உப்பு உற்பத்தியில் சரிவு ஏற்பட்டது.
எனவே, இந்தப் பற்றாக்குறையை ஈடுசெய்ய இந்தியாவிலிருந்து 12,000 மெட்ரிக் தொன் உப்பை தற்காலிகமாக இறக்குமதி செய்ய அரசாங்கம் அங்கிகாரம் வழங்கியது.
இருந்தபோதிலும், உப்பு இறக்குமதி நீண்டகால தீர்வாக இருக்காது என்று அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளது. மார்ச் மாதத்திற்குள் ஹம்பாந்தோட்டை உப்பு ஆலையில் உள்ளூர் உப்பு உற்பத்தி மீண்டும் தொடங்க உள்ளது என்றும், இது நிலையான உள்நாட்டு விநியோகத்தை உறுதி செய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
புதிய உற்பத்தி கிடைத்தவுடன் – விலைகள் குறைக்கப்படும் என்று ஹம்பாந்தோட்டை உப்பு நிறுவனம் உறுதியளித்துள்ளது.
தற்போது, ஹம்பாந்தோட்டை உப்பு ஆலைகள் – நாட்டின் உப்பு உற்பத்தியில் 50% பங்களிக்கின்றன. பரந்தன் மற்றும் புத்தளம் உப்பு ஆலைகளும் தேசிய உற்பத்தியில் பங்களிக்கின்றன.



