
பிரதேச செயலகங்களில் அறவீடு செய்யப்பட்டு வரும் வாகன வருமான வரி கட்டணங்களில் ஒரு பகுதியளவினையேனும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம். தாஹிர்கோரிக்கை விடுத்தார்.
நேற்று (08) நாடாளுமன்றில் உரையாற்றும் போதே, அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்;
”உள்ளூராட்சி மன்றங்கள் – வீதிகள், வடிகான்கள், பொதுச் சந்தைகள், களியாட்ட இடங்கள், மைதானங்கள், மயானங்கள், நூலகங்கள் மற்றும் திண்மக் கழிவகற்றல் போன்ற பல்வேறு சேவைகளை மக்களுக்காக வழங்கி வருகின்றன.
இவற்றுக்கும் மேலதிகமாக அண்மையில் வெளியிடப்பட்ட சுற்று நிரூபம் ஒன்றில், உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான சம்பள கொடுப்பனவில் 40 வீதத்தினை சபையின் நிதியிலிருந்து வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது.
இவ்வாறான நிலையில் முத்திரை வரி, நீதிமன்ற தண்டப்பணங்கள், சொத்துக்களுக்கான வரிகள் போன்றவற்றினைக் கொண்டே உள்ளூராட்சி மன்றங்கள் வருமானங்களைப் பெற்றுக் கொள்கின்றன.
அதே போல – கடந்த காலங்களில் மாட்டு வண்டிக்கான வரி, துவிச்சக்கர வண்டிக்கான வரிகள் போன்றவை அறவீடு செய்யப்பட்டு வந்த போதிலும், தற்காலத்தில் அவற்றின் பாவனை குறைவடைந்துள்ளமையால் அவ்வரி அறவீடு நடைமுறையிலில்லை.
ஆகையால் பிரதேச செயலகங்களில் அறவீடு செய்யப்பட்டு வருகின்ற வாகன வருமான வரி கட்டணங்களை பங்கீட்டு வரி பட்டியலில் இணைத்து, அதில் ஒரு பகுதியளவேனும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கினால் – அச் சபைகளின் சேவைகளை வினைத்திறன் மிக்கதாக கொண்டு செல்ல முடியும்” என்றார்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கு தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், வேலைத்தொழிலாளிகள், சுகாதார தொழிலாளிகள் போன்ற ஆளணித் தட்டுப்பாடுகளை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் கவனத்திலெடுக்குமாறும் உள்ளூராட்சி அமைச்சரிடம் – இதன்போது தாஹிர் எம்.பி வலியுறுத்தினார்.
உள்ளூராட்சி சபையொன்றின் தலைவராக – மூன்று தடவை தான் பணியாற்றியதாகவும், அதன் மூலம் உள்ளூராட்சி சபைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தான் நன்கு அறிந்தவர் எனவும் இதன்போது அவர் தெரிவித்தார்.
(நாடாளுமன்ற உறுப்பினரின் ஊடகப் பிரிவு)



