
வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொண்டு -நாட்டிலிருந்து இந்த வருடம் 03 லட்சத்துக்கும் அதிகமானோர் வெளியேறியுள்ளனர் என்று, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இம்மாதம் 13ஆம் திகதிய நிலைவரப்படி, 300,162 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுச் சென்றுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் இது போன்ற அதிக எண்ணிக்கைகள் பதிவு செய்யப்பட்டிருப்பது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு 2022 இல் 310,948 பேர் வெளிநாடு சென்றுள்ளனர்.
இவ்வாறு வெளிநாடு சென்றுள்ளவர்களில் 177,804 பேர் (60 வீதம்) ஆண்களாவர். 122,358 பெர் பெண்களாவர். வெளிநாடுகளுக்குச் சென்றவர்களில் 184,140 பேர் சுய அடிப்படையில் சென்றுள்ளனர். 116,022 பேர் வேலைவாய்ப்பு முகவர் மூலம் சென்றுள்ளனர்.
73,995 இலங்கையர்கள் குவைத் நாட்டில்அதிகளவில் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர். அதைத் தொடர்ந்து 49,499 தொழிலாளர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ளனர். தென் கொரியா (7,002), இஸ்ரேல் (9,211), ருமேனியா (10,274), மற்றும் ஜப்பான் (8,251) போன்ற நாடுகளில் இலங்கையர்கள் வேலை தேடும் போக்கு அதிகரித்து வருவதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள், வேலைக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை 311,000 ஐ தாண்டும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கணித்துள்ளது.
மேலும், வெளிநாட்டு பணியாளர்களிடமிருந்து 2024 நொவம்பர் வரை, இலங்கைக்கு 5,961.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கைப் பெறுமதியில் சுமார் 172631 கோடி ரூபாய்) கிடைத்தள்ளது.



