தலைப்புச் செய்திகள்

சிறுவர்களின் நிர்வாண வீடியோக்கள் மற்றும் படங்களை இணையத்தில் பகிர்ந்தமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவு

இலங்கையைச் சேர்ந்த சிறுவர்களின் நிர்வாண வீடியோக்கள் மற்றும் படங்களை இணையத்தில் வைத்திருந்தமை மற்றும் பகிர்ந்தமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள காணாமற்போன மற்றும் சுரண்டப்பட்ட சிறுவர்களுக்கான தேசிய மையம் (NCMEC) இது தொடர்பில் இலங்கை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் முன்வைத்த விடயங்களை- நீதவான் பரிசீலித்ததன் பின்னர் நேற்று (10) நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள காணாமற்போன மற்றும் சுரண்டப்பட்ட சிறுவர்களுக்கான தேசிய மையம் 08 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும். அதன் உறுப்பு நாடுகளின் வயது குறைந்த குழந்தைகளின் நிர்வாண வீடியோக்கள் மற்றும் படங்கள் இணையத்தில் பகிரப்படுவதைக் கண்டறியும் மென்பொருள் உள்ளது என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இலங்கையில் உள்ள பல தரப்பினர் இவ்வாறு சிறுவர்களின் திரிபுபடுத்தப்பட்ட மற்றும் நிர்வாண வீடியோக்கள் மற்றும் படங்களை இணையத்தில் பகிர்வுள்ளனர் என, தகவல் கிடைத்துள்ளதாக, பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் – நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கும் இது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், எனினும் இதுவரை பாதிக்கப்பட்ட ஒருவரைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் அந்தப் பணியகம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.