
– பாறுக் ஷிஹான் –
அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம் நேற்று (10) திருக்கோவில் பகுதியில் இடம்பெற்றது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அம்பாறை மாவட்ட தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் இந்தப் போராட்டம் இடம்பெற்றது. இதில் பங்கேற்றவர்கள் -காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் புகைப்படத்தை ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்; “சர்வதேச மனித உரிமைகள் தினம் எதற்காக நினைவு கூறுகிறார்கள் என்று தெரியவில்லை எனவும், மனித நேயமே இல்லாத இந்த நாட்டிலே மனித உரிமைகள் தினத்தை நினைவு கூறுவதில் எவ்வித பிரயோசனமும் இல்லை” என்றனர்.
“கடந்த 15 வருடமாக – காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளை மீட்பதற்கு, நாங்கள் வீதியில் நிற்கின்றோம். உலக நாடுகளும், எமது நாடும் எங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.எவ்வித பிரயோசனமும் இல்லாமல் ஒவ்வொரு அம்மாக்களும் மன வேதனையுடன் உள்ளனர். இன்று நூற்றுக்கணக்கான அம்மாக்கள் உயிரிழந்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக் கொண்டிருப்போர் குறைந்த எண்ணிக்கையானவர்களே தற்போது உள்ளோம்.
எனவே, உயிருடன் இருப்போரும் – இறப்பதற்கு முன்னர், எங்களுடைய காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் மற்றும் உறவுகளுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். மனித உரிமைகள் அமைப்புக்கள் பல இருந்தும் என்ன பலன்?” எனவும் அவர் கேள்வியெழுப்பினர்.
“எத்தனை மனித உரிமைகள் அமைப்புக்கள் இருந்தாலும் – காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களுக்காக கதைப்பதற்கும் ஒருவரும் இல்லை. இந்த நிலையில்தான சர்வதேச மனித உரிமைகள் தினத்தை கருப்பு தினமாக அனுஸ்ரிக்கின்றோம்” என, இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட – வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்தார்கள்.
குறித்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
நேற்று (10) சர்வதேச மனித உரிமைகள் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.




