
கடந்த வருடம் நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கென பொறுப்பேற்கப்பட்ட வேட்புமனுப் பத்திரங்களை மீளப் பெற்று, புதிய வேட்புமனுக்களைக் கோருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு, உள்ளூராட்சி சபைத் தேர்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக – சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக கடந்த மாதம் 25ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற – அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில், 2023ஆம் ஆண்டில் பொறுப்பேற்கப்பட்ட வேட்புமனுப் பத்திரங்களை ரத்துச் செய்து, புதிய வேட்புமனுக்கள் கோரப்பட்டு – தொடர்ந்த வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, அனைத்து வாக்காளர்களின் வாக்குரிமை மற்றும் இளைஞர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு நியமனப் பத்திரங்களை சமர்ப்பிக்கும் உரிமையைப் பாதுகாப்பதற்காக, தற்போது பொறுப்பேற்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்குரிய வேட்புமனுப் பத்திரங்களை மீளப் பெறுவதற்கும், புதிய வேட்புமனுக்களைக் கோருவதற்குமான ஏற்பாடுகளை வகுத்துக் கொள்ளக்கூடிய வகையில், தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கும் பொருட்டு, உள்ளூராட்சி சபைத் தேர்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு, சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக, பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.



