தலைப்புச் செய்திகள்

மாவடிப்பள்ளி உயிரிழப்பு: கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பம்

– பாறுக் ஷிஹான் –

மதரஸா மாணவர்கள் உள்ளிட்டோர் – மாவடிப்பள்ளியில் நீரில் மூழ்கி மரணித்த சம்பவ இடத்துக்கு இன்று (01) விஜயம் செய்த கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என். ஜயபத்மவின் ஆலோசனைக்கமைய – கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்  ரீ.எச்.டி.எம்.எல். புத்திகவின் வழிகாட்டலில் குறித்த விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவளை சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ். ஜெயலத் தலைமையிலான பொலிஸ் குழுவினரும் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். அத்துடன் காரைதீவு பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளுக்கு உத்துழைப்புகளை வழங்கி வருகின்றனர்.

சம்பவம் நடைபெற்ற போது, அந்தப் பகுதியில் சுமார் 05 அடிக்கும் அதிகமான உயரத்தில் வெள்ளம் சென்றுள்ளதாகவும், மாணவர்களை ஏற்றி வந்த உழவு இயந்திரத்தின் பெட்டி கழன்று – சுமார் 150 மீற்றர் வேறாக சென்றிருக்கக் கூடும் என்ற கோணத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தவிர, விபத்து நடைபெற்ற போது – அங்கு என்ன நடந்தது? யாரெல்லாம் பயணித்தார்கள் போன்ற கேள்விகள் தொடுக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

கடந்த 26ஆம் திகதி – நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கி 12 பேரை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் விபத்திற்குள்ளானது. இதன்போது நிந்தவூர் காஷிபுல் உலூம் மதரஸாவிலிருந்து சம்மாந்துறைக்கு விடுமுறையில் சென்ற மாணவர்கள் உள்ளிட்டோர் நீரில் மூழ்கினர்.

அவர்களில் சம்பவ தினம் ஐவர் காப்பாற்றப்பட்டனர். ஆயினும் அந்த உழவு இயந்திரத்தில் பயணித்தவர்கள் உள்ளடங்கலாக 08 பேர் உயிரிழந்த நிலையில், சடலங்களாக மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் மதரஸா மாணவர்கள் 06 பேர் உயிரிழந்தனர். நேற்று வெள்ளிக்கிழமை ஆறாவது மாணவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இதன்போது சடலங்களாக முகமட் ஜெசில் முகமட் சாதீர் (வயது-16), அப்னான், பாறுக் முகமது நாஸிக் (வயது-15), சஹ்ரான் (வயது-15), அலியார் முகமது யாசீன் (வயது-15), தஸ்ரிப் ஆகிய மதரஸா மாணவர்களும், உழவு இயந்திர சாரதி உதுமாலெப்பை முகமது அகீத் (வயது-17) மற்றும் கல்முனையிலுள்ள புகை பரிசோதனை நிலைய ஊழியர் அஸ்மீர் என்பவரும் மீட்கப்பட்டனர்.

சடலங்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர், சாய்ந்தமருது ஜனாசா நலன்புரி மக்கள் பேரவையினர், மாளிகைகாடு ஜனாசா நலன்புரி அமைப்பினர், காரைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த தன்னார்வ இளைஞர் குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.