தலைப்புச் செய்திகள்

நாடாளுமன்ற முதல்நாள் அமர்விலேயே ‘வேலையைக் காட்டிய’ டொக்டர் அர்ச்சுனா: ஊழியர் கெஞ்சிக் கேட்டும் முடியவில்லை

யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் அர்ச்சுனா ராமநாதன் – புதிய நாடாளுமன்றத்தின் முதல் நாளில், பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து கொண்டு, எழும்ப மறுத்தமை பரபரப்புச் செய்தியாக மாறியுள்ளது.

சாவகச்சேரி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக பணியாற்றியபோது, அங்குள்ள பல்வேறு பிரச்சினைகளை பொதுவெளிக்கு கொண்டு வந்ததை அடுத்து பிரபல்யமான ஒரு நபராக அறியப்பட்டார். இதன் பின்னர் இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், 10வது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில், எதிர்க்கட்சித் தலைவருக்குரிய ஆசனத்தில் டொக்டர் அர்ச்சுனா அமர்ந்து கொண்டார். இதனையடுத்து, அவரை வேறோர் ஆசனத்தில் அமருமாறு, நாடாளுமன்ற ஊழியர் ஒருவர் வேண்டிக் கொண்ட போதும், அதனை டொக்டர் அர்ச்சுனா மறுதலித்து விட்டார்.

புதிய நாடாளுமன்றத்தின் முதல் நாளில் – ஆசன ஏற்பாடுகள் எதுவும் இல்லை என்பதை இதன்போது, நாடாளுமன்ற ஊழியருக்கு டொக்டர் அர்ச்சுனா சுட்டிக்காட்டினார்.

“என்னை எழும்பச் சொல்வதற்கான காரணம் என்ன?” – டொக்டர் அர்ச்சுனா
“இது எதிர்க்கட்சித் தலைவருக்கான ஆசனம்” – நாடாளுமன்ற ஊழியர்
”எதிர்க்கட்சித் தலைவருக்கான ஆசனம் என்று எழுதிப் போடப்பட்டுள்ளதா?” – டொக்டர் அர்ச்சுனா

என, இவருக்கும் இடையிலான உரையாடல் தொடர்ந்தது.

மேலும், “நாங்கள் நாடாளுமன்ற மரபை மாற்றியுள்ளோம்” எனக் கூறி, அந்த ஆசனத்தில் இருந்து எழும்புவதற்கு அவர் மறுத்துவிட்டார்.