தலைப்புச் செய்திகள்

390 நாட்கள் கூடிய நாடாளுமன்றில், 34 தடவை மாத்திரம் பங்கேற்று, 197ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்ட பைசல் காசிம் இம்முறை தோற்கடிக்கப்பட வேண்டும் – வேட்பாளர் தாஹிர்

“நாடாளுமன்றில் வினைத்திறன் அற்றவர்களாக இருப்பவர்களையும், தூங்கி வழிபவர்களையும் தொடர்ந்தும் தெரிவு செய்து – நாம் தோல்வியுள்ள சமூகமாக மாறக் கூடாது” என்று, நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் 07ஆம் இலக்கத்தில் போட்டியிடுபவருமான எம்.ஏ.எம். தாஹிர் தெரிவித்தார்.

நிந்தவூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் கூறினார். மேலும் அவர் குறிப்பிடுகையில்;

“நமது நிந்தவூரிலிருந்து பைசல் காசிம் அவர்களை தொடர்ச்சியாக பல தடவை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்து – மக்கள் அனுப்பி வருகின்றனர். ஆனால், அவர் நாடாளுமன்றில் செயற் திறனற்ற ஒருவராக இருந்துள்ளார் என்பதை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் ஆய்வு செய்து அறிக்கையிடும் manthri.lk எனும் இணையத்தளம் வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த நாடாளுமன்றத்தில் 241 பேர் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். அவர்களில் பைசல் காசிம் 197ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் – எத்தனை சபை அமர்வில் கலந்து கொண்டனர், எத்தனை விவாதங்களில் பேசியுள்ளனர், எவ்வாறான விவாதங்களில் பங்கேற்றுள்ளனர் என்பது போன்ற விடயங்களை வைத்தே, நாடாளுமன்ற உறுப்பினர்களின் வினைத்திறனை, manthri.lk எனும் இணையத்தளம் நிர்ணயிக்கிறது.

கடந்த நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை 390 நாட்கள் கூடியது. ஆனால், நமது ஊரிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பைசல் காசிம், 34 தடவை மாத்திரமே நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றுள்ளார். அதாவது, 390 நாட்கள் கூடிய நாடாளுமன்றில் 356 நாட்கள் பைசல் காசிம் பங்கேற்கவில்லை.

மக்களின் தேவைகள், பிரச்சினைகள் பற்றிப் பேச வேண்டிய நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகும் பிரதிநிதிகள், இவ்வாறு நாடாளுமன்றத்துக்கு செல்லாமல் இருந்துள்ளமை, அவர்களை நம்பி வாக்களித்த மக்களுக்குச் செய்த பாரிய துரோகமாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர் எனும் பதவியை – சமூக அந்தஷ்துக்காக சிலர் பெற்றுக் கொள்கின்றனர். தங்களை எம்.பி என்று மக்கள் கூறும் போது, அவர்களுக்குள் ஒரு குதூகலம் ஏற்படுகிறது. அதற்காகவே அவர்கள் தேர்தலில் பணத்தைக் கொட்டி போட்டியிட்டு வெற்றி பெறுகின்றனர்.

இதனை மக்கள் தொடரந்தும் அனுமதிக்கக் கூடாது. செயற் திறனற்றவர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டு, செயற் திறனுடையவர்களை நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்ய வேண்டும்.

மக்களுக்கு எவ்வாறு செயற் திறனுடன் நான் சேவையாற்றி உள்ளேன் என்பதற்கு, மூன்று தடவை நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக இருந்து – நான் செய்துள்ள சேவைகள் சாட்சி கூறும்.

எனவே, வேட்பாளர்கள் வென்று, அவர்களை நம்பி வாக்களிக்கும் வாக்காளர்கள் ஒவ்வொரு தடவையும் தோற்றுப் போகும் நிலையை மாற்றியமைக்க வேண்டும்.

அந்த வகையில், இம்முறை வேட்பாளரும் வென்று, வாக்காளரும் வெல்லும் வகையில் எனது 07ஆம் இலக்கத்துக்கு வாக்களித்து – வெற்றிபெறச் செய்யுங்கள். உங்களுக்காக எனது குரல் நாடாளுமன்றத்திலும் நிச்சயம் ஓங்கி ஒலிக்கும்” என தாஹிர் மேலும் தெரிவித்தார்.