
சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட பி.எம்.டப்ளியு கார் ஒன்றை பயன்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குச் சென்று இன்று (23) வாக்குமூலம் வழங்கிய அமைச்சர், கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்மையை அடுத்து, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
சமீபத்தில் கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த மேற்படி வாகனத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். இதன்போது சட்டவிரோதமான முறையில் அந்த வாகனம் பொருத்தப்பட்டமை தெரியவந்தது.
ஹோட்டல் வாகன நிறுத்துமிடத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் சொகுசு வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். WP C 24-0430 என்ற இலக்கத் தகடு கொண்ட கறுப்பு நிற பி.எம்.டப்ளியு வாகனம், ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக, காமினி அபேரத்ன என்ற நபரால் நிறுத்தப்பட்டதாக ஹோட்டல் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அப்போது நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த வாகனம் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவுக்கு சொந்தமானது என்றும், காமினி அபேரத்ன எனும் – முன்னாள் அமைச்சரின் சாரதியால் நிறுத்தப்பட்டதை, சாரதி உறுதிப்படுத்தினார்.
இதேவேளை, வேறொரு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவை கைது செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.



