தலைப்புச் செய்திகள்

போலி நாணயத் தாள்களுடன் பிள்ளையான் கட்சி பிரமுகர் அக்கரைப்பற்றில் கைது: தேர்தல் துண்டுப் பிரசுரங்களும் சிக்கின

அடையாளப்படம்

– புதிது செய்தியாளர் –

போலி நாணயத்தாள்களுடன் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் களுதாவளை பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவர் – அக்கரைப்பற்றில் நேற்று (18) விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது குறித்த நபர்கள் பயணித்த சொகுசு வாகனத்தில் – தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தேர்தல் துண்டுப் பிரசுரங்களும் காணப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களிடமிருந்து போலியான 05 ஆயிரம் ரூபாய் 10 நாணயத் தாள்கள் கைப்பற்றப்பட்டன.

வெள்ளை நிற ‘வெசல்’ சொகுசு கார் ஒன்றில் – மேற்படி மூவரும் மட்டக்களப்பிலிருந்து அக்கரைப்பற்றுக்கு வந்திருந்த போதே கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டமையை அடுத்து, அவர்களை இன்று (19) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.