தலைப்புச் செய்திகள்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இல்லம் மீது ட்ரோன் தாக்குதல்

ஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வடக்கு பகுதியிலுள்ள விடுமுறை இல்லம் மீது ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை அல் ஜசீரா உறுதிப்படுத்தி – செய்தி வெளியிட்டுள்ளது. இதனையடுத்து தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் ஒலித்துள்ளன.

லெபனானில் இருந்து ஏவப்பட்ட மூன்று ஆளில்லா விமானங்களில் ஒன்று சிசேரியா நகரில் உள்ள நெதன்யாகுவின் இல்லத்தை இன்று (19) தாக்கியதாக, நெதன்யாகுவின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். இருந்தபோதிலும், அங்கு நெதன்யாகு இருக்கவில்லை என்றும் உயிர்ச்சேதங்கள் எவையும் ஏற்படவில்லை எனவும் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மற்ற இரண்டு ஆளில்லா விமானங்களும் இடைமறிக்கப்பட்டுள்ளன. லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேல் முழுவதும் மொத்தம் 100 க்கும் மேற்பட்ட ரொக்கெட்கள் வீசப்பட்டதாகவும், இதனால் குறைந்தது 13 பேர் காயமடைந்தனர் எனவும் இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது.

நெதன்யாகுவின் வீட்டின் மீதான தாக்குதலை ஒரு கொலை முயற்சி என்று, இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹிஸ்புல்லா அமைப்பினர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.