தலைப்புச் செய்திகள்

“மக்களுக்கு மாற்றம் தேவையென்பதால், தேர்தலில் போட்டியிடப் போவதில்லை”: முன்னாள் நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர்; இந்த முடிவுக்கு அரசியலில் இருந்து விலகியதாக அர்த்தமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னைய அரசாங்கத்துடன் இணைந்து – தேசத்தை மீளக் கட்டியெழுப்ப தன்னால் இயன்ற உதவிகளை வழங்கியதாகவும், ஆனால் பொதுமக்களுக்கு மாற்றம் தேவை என்பது புலனாகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திலும் நாடாளுமன்றத்திலும் மாற்றத்திற்கான மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள சேமசிங்க, பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனத் தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும், தன்னை முன்னர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்த – அநுராதபுர மக்களுக்கு சேவை செய்யப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் நாட்டுக்குத் தேவைப்படும் போதெல்லாம் தனது நிபந்தனையற்ற உதவிகளை வழங்கவுள்ளதாகவும் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன மூலம் நாடாளுமன்றுக்குத் தெரிவான ஷெஹான் சேமசிங்க, ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்தார்.