முஸ்லிம் தனியலகு கோரிக்கை: உரத்துப் பேச வேண்டிய தருணம்

🕔 February 11, 2016

Article - Inamullah - 02
ந்திய – இலங்கை உடன்படிக்கை 1987 ஜூலை மாதம் 29 ஆம் நாள் கைச்சாத்திடப்பட்டது. அந்த உடன்படிக்கை சிபாரிசு செய்த அதிகாரப்பரவலாக்கல் தீர்வின் பிரகாரம் 13 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் மூலம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.

அன்று, வடக்கு – கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக இணைக்கப்பட்டன. ஆயினும் அவற்றை தனித்தனி நிர்வாக அலகுகளாக மாற்றுவதா என்பதனை அறிய,  வாக்கெடுப்பு மூலம், மக்கள் கருத்துக் கணிப்பு ஒன்றினை வடக்கு – கிழக்கில் நடத்துவதாகத் தீர்மானிக்கப்பட்து. இதற்கிணங்க, 1988 இல்வடகிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் இடம் பெற்றது.

கிழக்கில் சுமார் 45% அரசியல் வலுவினைக் கொண்டிருந்த முஸ்லிம் சமூகம், இணைந்த வடகிழக்கில் 17% அரசியல் வலுவற்ற சிறுபான்மையாக மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதேபோல், வடக்கையும் கிழக்கையும் தொடர்ந்தும் இணைத்து வைப்பதா அல்லது தனித்தனி அதிகார அலகுகளாக மாற்றுவதா என்ற வாக்கெடுப்பின் மூலம், முஸ்லிம் சமூகத்தை பலிக்கடாவாக மாற்றுகின்ற உபாயமும் அபாயமும் உணரப்பட்டது.

அவ்வாறான ஒரு சூழ் நிலையில்தான், இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களுக்கு நிலத் தொடர்பற்ற அதிகார அலகு ஒன்றுவேண்டும் என்று ஆரம்பத்திலும், பின்னர் தென்கிழக்கில் ஒரு அதிகார அலகு வேண்டும் என்றும் முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கைகளை முன்வைத்தது.

இடைப்பட்ட காலங்களில் விடுதலைப் புலிகள், இந்திய சமாதானப் படையினர், தமிழ் தேசிய ராணுவம் மற்றும்  மாகாண அரசு போன்றவை, வடகிழக்கு முஸ்லிம்களை கையாண்ட விதமும், அது தொடர்பில் இலங்கை ராணுவத்தின் பாராமுகமும் ஏமாற்றமளிப்பதாக அமைந்திருந்தது.

யுத்தமாயினும் சமாதானமாயினும் முஸ்லிம்கள் செலுத்திய விலை வரலாறாகிவிட்டது.

என்றாலும் 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாதிக ஹெல உறுமய கட்சி, உயர் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மனு மீதான தீர்ப்பின் மூலம், வடக்கில் இருந்து கிழக்கு மாகாணம் வேறாக பிரிக்கப்பட்டது. 2008 இல் மாகாணசபை தேர்தலும் கிழக்கில் இடம் பெற்றது.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை அன்று அமைச்சராக இருந்த அதாஉல்லாஹ் மாத்திரமே வடக்கிலிருந்து கிழக்கை பிரிக்குமாறு பகிரங்கமாக பிரசாரம் செய்தார். பின்னர், வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டமைக்கு நன்றிக் கடனாகவே – தான் தொடர்ந்தும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக அதாஉல்லாஹ் கூறிவந்தார்.

இப்பொழுது, மீண்டும் இணைந்த வடகிழக்கில் அரசியல் தீர்வொன்றை தமிழ் தேசியக் கூட்டணி மற்றும் புலம் பெயர் தமிழர்கள் வேண்டி நிற்கின்றனர். இதற்கு சர்வதேச மற்றும் இந்திய அழுத்தங்களின் பின் புலம் உள்ளன. எனவே, இந்த விவகாரத்தினை முஸ்லிம் அரசியல் மற்றும் சிவில் தலைமைகள் மிகவும் நன்றாக ஆய்வுக்கு உட்படுத்துதல் வேண்டும்.

வடகிழக்கு இணைப்பு மற்றும் பிரிப்பு விவகாரத்தில் மீண்டும் முஸ்லிம் சமூகத்தை பலிக்கடாவாக்குவதற்கான அபாயங்கள் உள்ளன. தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகள் இதற்கான உபாயங்களைத் தீட்டுகின்றமை தெரிகின்றது.

வடக்கிலும் கிழக்கிலும் பரந்துபட்டு வாழும் முஸ்லிம்கள், வடக்கு கிழக்குக்கு வெளியே வாழுகின்ற முஸ்லிம்கள் எல்லோரும் – புதிய அரசியல் கள நிலவரங்களையும்அரசியலமைப்பு மாற்றங்களையும் நிதானமாக ஆராய்ந்து, தமது  நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும்.

மாறாக, கடந்த காலங்களில் நாம் மனனமிட்ட சுலோகங்களை கிளிப்பிள்ளைகள் போல் உச்சரிப்பது ஆரோக்கியமான அரசியலாக மாட்டாது.

இது குறித்த பரந்துபட்ட கலந்துரையாடல்களையும், ஆய்வுப்பணிகளையும் முஸ்லிம் சமூகத்தினைச் சேர்ந்த புத்தி ஜீவிகள் மேற்கொள்ளுதல் காலத்தின் கட்டயமாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்