
ஜனாதிபதித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்களில் 03 வேட்பாளர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை என்றும், தொலைபேசியில் கூட அவர்களைத் தொடர்பு கொள்ள முடியாதுள்ளதாகவும் – ஜனநாயகம், மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க, தொலைக்காட்சி நிகழ்சியொன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்த நிலையில், ஒரு வேட்பாளர் உயிரிழந்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த மஞ்சுள கஜநாயக்க தெரிவிக்கையில் “இறந்தவருக்கான மாற்று வேட்பாளர் இன்னும் பெயரிடப்படவில்லை. பெயரிடாததில் சில பலவீனங்களை நான் காண்கிறேன்.
தற்போதுள்ள 38 வேட்பாளர்களில் 15 பேர் மட்டுமே குறைந்தது 10 பேரையாவது கூட்டி கூட்டம் நடத்தியுள்ளனர். பொக்கெட் மீட்டிங் என்ற கூட்டத்தையேனும் 15 பேர் மாத்திரமே ஏற்பாடு செய்திருந்தனர்.
மற்றைய 23 பேரில் 03 பேரைக் காணவில்லை. தேர்தல் ஆணைக்குழுவுக்கு அவர்கள் வழங்கிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பு விடுத்தால், அந்த 03 இல் இரண்டு பேரின் இலக்கங்களுக்கு வேறு தரப்பினரே பதில் வழங்குகின்றனர். மற்றைய நபர் தொலைபேசி அழைப்பை துண்டிக்கிறார்.
அந்த 23 பேரில் 05 பேருக்கு சமூக ஊடகங்களின் கீழ் பேஸ்புக் கணக்கு கூட இல்லை.
நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று குறைந்தது மூன்று பேர் ஊடகங்களுக்குச் சொல்லவில்லை.
மற்றைய விடயம் என்னவென்றால், இந்த 39 பேரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை எங்கள் இணையதளத்தில் பதிவேற்ற விரும்பினோம். அங்கும் அவர்களின் தொடர்பு மூலம் புகைப்படம் கூட பெற முடியவில்லை.
15 பேரைத் தவிர, மற்றைய 24 பேரை தகவல் தொடர்புக்கு கூட அணுக முடியாமலுள்ளது” என்றார்.



