
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து அமைச்சர் அலி சாஹிர் மௌலானாவை நீக்குவதற்கு – இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (28) இந்த தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவை கட்சியில் இருந்து நீக்குவதை தடுக்கும் வகையில் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், செயலாளர் மற்றும் உயர் பீடத்துக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுற்றாடல் துறை அமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் – நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து – கடந்த வருடம் ஒக்டோபர் மாதம், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக அலி சாஹிர் மௌலானா சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதசாசவுக்கு ஆதரவளிப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்த போதும், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அறித்தார்.
இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவை கட்சியிலியிருந்து இடைநிறுத்துவதாக முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்தது.
இதன்பின்னர், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா – கடந்த வாரம் அபிவிருத்தி திட்டங்கள் அமைச்சரவை அல்லாத அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.



